

பெங்களூரு:
பெங்களூருவில் ரூ.17.18 கோடி மோசடி
பெங்களூருவில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பொதுமக்களின் வங்கி கணக்குகளில் இருந்து சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடும் கும்பல் இந்த மோசடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செல்போனுக்கு ஏதேனும் பணம் விழுந்திருப்பதாக கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபடுவது, வங்கி கணக்கின் தகவல்களை பதிவேற்றம் செய்யும்படி கூறுவது உள்ளிட்ட பல்வேறு விதமான மோசடிகள் நடந்து வருகிறது.
சாதாரண மக்களில் இருந்து படித்த இளைஞர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் கூட இந்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்து வருகிறாகள். பெங்களூருவில் மட்டும் கடந்த 3 மாதங்களில் ரூ.17.18 கோடியை பொதுமக்களிடம் இருந்து சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடும் கும்பல் மோசடி செய்திருக்கிறார்கள். அதாவது மே மாதத்தில் ரூ.5.81 கோடியும், ஜூன் மாதத்தில் ரூ.5.25 கோடியும், ஜூலை மாதத்தில் ரூ.6.11 கோடியையும் மக்களிடம் இருந்து மர்மநபர்கள் மோசடி செய்திருந்தார்கள்.
112 என்ற எண்ணுக்கு...
பொதுமக்களிடம் மோசடி செய்த பணத்தில் கடந்த 3 மாதத்தில் ரூ.2 கோடியே 37 லட்சத்தை மாமநபர்களிடம் இருந்து மீட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் சைபர் கிரைம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். அதன்படி, கடந்த மே மாதம் ரூ.67.95 லட்சமும், ஜூன் மாதத்தில் ரூ.94.71 லட்சத்தையும், ஜூலை மாதத்தில் ரூ.74.38 லட்சத்தையும் போலீசார் மீட்டு இருக்கிறார்கள். இதுகுறித்து பெங்களூரு கமாண்டர் சென்டர் பிரிவின் துணை போலீஸ் கமிஷனர் ராமராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூருவில் கடந்த 3 மாதத்தில் மோசடி தொடாபாக 1,753 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இவ்வாறு மோசடி நடந்த உடன் பொதுமக்கள் புகார் அளிப்பதில்லை. தாமதமாக வந்து தான் புகார் கொடுக்கிறாகள். இதன் காரணமாக பொதுமக்களிடம் மோசடி செய்த பணத்தை மீட்க முடியாமல் போகிறது. ஆன்லைன் மூலமாக பொதுமக்கள் பணம் இழந்தால், அதுபற்றி 112 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உடனடியாக மக்கள் புகார் மற்றும் மோசடி குறித்த தகவல்களை தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவித்தால், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்க முடியும். சைபர் கிரைம் மூலமாக பணத்தை இழந்தவர்கள் ஆதங்கப்படாமல் 112 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.