மாணவர்களை பயங்கரவாதிகள் என்பதா?- தர்மேந்திர பிரதானுக்கு ராகுல் காந்தி கண்டனம்

போராட்டம் நடத்தும் இளைஞர்களை பயங்கரவாதி என்ற கூறிய மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்டு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ராகுல்காந்தி வலியுறுத்தினார்.
மாணவர்களை பயங்கரவாதிகள் என்பதா?- தர்மேந்திர பிரதானுக்கு ராகுல் காந்தி கண்டனம்
Published on

சி.பி.எஸ்.இ. விடைத்தாள் டிஜிட்டல் மதிப்பீடு குளறுபடிகள் மற்றும் நீட் வினாத்தாள் கசிவு போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களை பயங்கரவாதிகளின் ‘பி’ டீம் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டினார். அவரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியதாவது:-

பதவி விலக வேண்டும்

அதிகார ஆணவத்தால் மதிமயங்கி, மோடி அரசாங்கம் தங்கள் உரிமைகள், நியாயமான தேர்வுகள் மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை கோரும் மாணவர்களை மத்திய கல்வி மந்திரி பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தும் நிலைக்கு வந்துவிட்டது. யாருடைய தோல்விகளால் இத்தனை வினாத்தாள் கசிவுகள் ஏற்பட்டனவோ, யாருடைய ஆட்சியில் 20 மாணவர்கள் உயிரிழந்தார்களோ, கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை இருளில் மூழ்கடித்தாரோ, அவரே இன்று பாதிக்கப்பட்ட மாணவர்களையும் அவர்களுக்காக குரல் எழுப்பு பவர்களையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்.

இது ஒன்றும் புதிதல்ல. இந்தியாவுக்கு உணவு அளிக்கும் விவசாயிகளை பா.ஜனதாவினர் போராட்டங்களையே தங்கள் முழுநேர தொழிலாக கொண்டு வாழும் ஒட்டுண்ணிகள் என்றும் அழைத்தனர். கேள்விகள் கேட்டவர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தினார்கள்.இப்போது இளைஞர்களை பயங்கரவாதிகள் என்று அழைக்கிறார்கள். எனவே மத்திய மந்திரி தர்மந்திர பிரதான் கோடிக்கணக்கான இளைஞர்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்டு அவருடைய தோல்விகளுக்காக பதவி விலக வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com