பேய், பிசாசு என மனைவியை கூறுவது ஒன்றும் கொடூரம் அல்ல: பாட்னா ஐகோர்ட்டு தீர்ப்பு

நரேஷ் அவருடைய மனைவியை கொடுமைப்படுத்தினார் என்று நிரூபிப்பதற்கான மருத்துவ ஆவணங்கள் எதுவும் இல்லை என்று ஐகோர்ட்டு தெரிவித்தது.
பேய், பிசாசு என மனைவியை கூறுவது ஒன்றும் கொடூரம் அல்ல: பாட்னா ஐகோர்ட்டு தீர்ப்பு
Published on

பாட்னா,

ஜார்க்கண்டின் பொகாரோ பகுதியை சேர்ந்தவர்கள் சாஹ்தியோ குப்தா. இவருடைய மகன் நரேஷ் குமார் குப்தா. இந்நிலையில், கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி ஜோதி என்பவருடன் நரேஷ் குப்தாவுக்கு திருமணம் நடந்தது. ஓராண்டாக இவர்களுடைய திருமண வாழ்க்கை நன்றாக சென்றது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜோதியின் தந்தை கன்னையா லால், நரேஷ் மற்றும் அவருடைய தந்தைக்கு எதிராக வரதட்சணை புகார் அளித்துள்ளார். அதில், கார் வாங்கி தர வேண்டும் என கூறி அவர்கள் மகளை கொடுமை செய்துள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

நரேஷ் அவருடைய மனைவியை பேய், பிசாசு என்று கூறியுள்ளார் என்றும். தன்னுடைய மகளை மனதளவிலும், உடலளவிலும் அவர்கள் கொடுமைப்படுத்தினர் என்றும் குற்றச்சாட்டாக தெரிவித்து இருக்கிறார்.

இந்த வழக்கு பீகாரின் நாலந்தா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, ஐ.பி.சி.யின் 498-ஏ பிரிவின் கீழ் திருமணத்திற்கு பின்னான கொடூரம் புரிந்துள்ளனர் என தீர்ப்பு வந்தது. இதனை கூடுதல் செசன்ஸ் கோர்ட்டும் உறுதி செய்தது.

இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக பாட்னா ஐகோர்ட்டில் நரேஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதி பிபேக் சவுத்ரி விசாரணை மேற்கொண்டார்.

அதில், நரேஷ் மனைவியை கொடுமைப்படுத்தினார் என்று நிரூபிக்க சான்றுகள் எதுவும் இல்லை என்றும் ஜோதி கொடுமைப்படுத்தப்பட்டார் என்ற உண்மையை நிரூபிப்பதற்கான மருத்துவ ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் ஐகோர்ட்டு தெரிவித்தது.

அதனுடன், மனைவியை பேய், பிசாசு என்று கூறிய விசயங்களையும் நீதிபதி புறம் தள்ளியுள்ளார். இதுபோன்ற தோல்வியில் முடிந்த திருமண உறவின்போது, கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒருவரையொருவர் திட்டி கொள்வது வழக்கம் என கூறி இந்த புகார் மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.

இந்த குற்றச்சாட்டுகள் கொடூர விசயங்களுக்கு உட்பட்டவை அல்ல என்றும் அவர் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டார். கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தும் உத்தரவிட்டார். இதனால், 28 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் மனுதாரர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com