கர்நாடக முதல்-மந்திரியாக பதவியேற்க முடிவா? கார்கே அளித்த பதில்

கர்நாடக உள்துறை மந்திரி பரமேஷ்வரா கூறும்போது, மாநிலத்தின் முதல்-மந்திரியாக வர கார்கே விரும்பினால் அதனை நான் வரவேற்கிறேன் என்றார்.
கர்நாடக முதல்-மந்திரியாக பதவியேற்க முடிவா? கார்கே அளித்த பதில்
Published on

கலபுரகி

கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா இருந்து வருகிறார். துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் உள்ளார். இந்த நிலையில், கர்நாடக அரசின் தலைமை பதவியில் மாற்றம் ஏற்படுவது பற்றி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதுதொடர்பாக நிருபர்களிடம் அவர் இன்று கூறும்போது, முதல்-மந்திரி மாற்றம் தொடர்பான விவகாரத்தில் தீர்வு காண சில காலம் ஏற்படும். கட்சி தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் ஆலோசிக்கப்படும் என்றார். கர்நாடக உள்துறை மந்திரி பரமேஷ்வரா கூறும்போது, மாநிலத்தின் முதல்-மந்திரியாக வர கார்கே விரும்பினால் அதனை நான் வரவேற்கிறேன் என்றார்.

இதுபற்றி குறிப்பிட்ட கார்கே, காங்கிரசின் கொள்கைகளில் நம்பிக்கை வைத்து நாங்கள் பணியாற்றி வருகிறோம். நான் முதல்-மந்திரியானால் நன்றாக இருக்கும் என ஒவ்வொருவரும் கூறி வருகின்றனர்.

கட்சியில் பல முடிவுகளை சோனியா காந்தியே எடுப்பார். ஆனால், கர்நாடகாவில் ஏற்கனவே முதல்-மந்திரி ஒருவர் உள்ளார். அதனால், அந்த கேள்வி தற்போது எழவில்லை என கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் கேரளாவில் காங்கிரஸ் தொடர்புடைய கூட்டணியே பெரும்பான்மை பெறும் என கூறியதுடன், அசாமில் கணித்ததற்கும் கூடுதலாக சிறப்பான வெற்றி கிடைக்கும் என கூறினார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பல்வேறு கலவையான முடிவுகள் கிடைத்துள்ள சூழலில், கட்சியின் தொண்டர்களிடம் இருந்து கிடைத்துள்ள தகவலின்படி, தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியும், கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் உறுதியாக வெற்றியை பெறும் என கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com