கொரோனாவால் பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடா? - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல்

கொரோனாவால் பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடு தருவது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பலியானோர் குடும்பங்களுக்கு இழப்பீடா? - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 674 ஆகி உள்ளது.

இந்த தருணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரானாவுக்கு பலியான டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள் உள்ளிட்ட முன்வரிசை பணியாளர்களின் உயிரிழப்பை ஈடு செய்ய சரியான இழப்பீட்டு திட்டம் ஒன்றை உருவாக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கில் கோரப்பட்டுள்ளது.

ஒரு இந்திய குடிமகனின் மரணம், அவரது சொந்த வாழ்க்கையை மட்டுமல்ல, அவரை சார்ந்திருந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கிறது, அப்படிப்பட்ட நிலையில், ஒரு குடும்ப உறுப்பினரின் மரணமும், கொரோனாவால் உலகளவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அளவிலான வேலை இழப்பும், குடும்பத்தினர் உயிர்வாழ்வதற்கான நிதி இல்லாமல் செய்து விடுகிறது எனவும் வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் பெரும்பான்மையான மக்கள், நிதி ரீதியாக பலவீனமான பிரிவுகளை சேர்ந்தவர்கள், அதில் ஒருவர் மட்டுமே சம்பாதிக்கும் உறுப்பினர், மற்றவர்கள் அவரை சார்ந்து இருக்கிறார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

வக்கீல் தீபக் பிரகாஷ் என்பவர் தொடுத்துள்ள இந்த பொது நல வழக்கு அடுத்த சில நாட்களில் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com