

சித்ரதுர்கா
உறவினர் வீட்டிற்கு
துமகூரு மாவட்டத்தை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது40). இவரது மனைவி மல்லிகா (37). இவர்கள் 2 பேரும் விஜயநகர் மாவட்டம் ஒசபேட்டைக்கு காரில் சென்றனர். இவர்களுடன் கலீல் (42), தப்ரீஷ் (13), நர்கீஸ், ரேகன், ரகுமான் ஆகிய 5 பேரும் சென்றனர்.
பின்னர் அங்கிருந்து அவர்கள் 7 பேரும் துமகூருவிற்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை 3 மணிக்கு சித்ரதுர்கா மாவட்டம் மல்லாபுரா கிராமம் அருகே கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற லாரி மீது மோதியது.
இதில், கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த 7 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களில் சம்சுதீன், மல்லிகா, கலீல், தப்ரீஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்கள்.
படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நர்கீஸ், ரேகன், ரகுமான் ஆகிய 3 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை
இதுகுறித்து தகவல் அறிந்த சித்ரதுர்கா புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். பின்னர் சம்சுதீன், மல்லிகா, கலீல், தப்ரீஷ் ஆகிய 4 பேர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், டிரைவர் சம்சுதீன் தூக்கத்தில் காரை ஓட்டியதால் சாலையோரம் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதுகுறித்து சித்ரதுர்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.