குஜராத்தில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து : 5 பேர் படுகாயம்

நள்ளிரவு நேரம் என்பதால் சத்தம் கேட்டு வீடுகளை விட்டு வெளியே வந்த மக்கள் மீது காரின் பாகங்கள் பாய்ந்தன.
குஜராத்தில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து : 5 பேர் படுகாயம்.
கார் சிலிண்டர் வெடித்து சிதறியது.
Published on: 

காந்தி நகர்,

குஜராத் மாநிலம் வதோதராவில் நள்ளிரவில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி, அதிலிருந்த சிஎன்ஜி சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் ஒரு பெண் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.

நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்

குஜராத மாநிலம் வதோதராவின் நவயார்டு பகுதியில் உள்ள ராம்வாடி குடியிருப்பு பகுதியில் கடந்த 4-ம் தேதி அன்று ஹோண்டா சிட்டி கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது நள்ளிரவு 2 மணியளவில் அந்த காரில் திடீரென தீப்பிடித்ததை அடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே காரில் இருந்த சிஎன்ஜி சிலிண்டர் காதுகேளாத அளவுக்கு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

200 மீட்டர் தூரம் சிதறிய பாகங்கள்

இந்த வெடிப்பு சம்பவத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், காரின் இரும்புத் தகடுகள் மற்றும் பாகங்கள் சுமார் 200 மீட்டர் தூரம் வரை சிதறிப் பறந்து விழுந்தன. நள்ளிரவு நேரம் என்பதால் சத்தம் கேட்டு வீடுகளை விட்டு வெளியே வந்த மக்கள் மீது காரின் பாகங்கள் பாய்ந்தன.

5 பேர் படுகாயம்

இதில் அப்பகுதியைச் சேர்ந்த தீபிகாபென், உஷாபென், நாகின்பாய், சவிதாபென் மற்றும் வினாபென் ஆகிய 5 பேர் மீது காரின் கூர்மையான இரும்புப் பாகங்கள் பாய்ந்து பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, வதோதரா சயாகாஞ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உருக்குலைந்த கார் – தீக்கிரையான கடை

இந்த பயங்கர விபத்தில் ஹோண்டா சிட்டி கார் முற்றிலும் உருக்குலைந்து கருகியது. மேலும், வெடிப்பின் வீரியத்தால் காரின் அருகில் இருந்த ஒரு சிறிய கடையும், அங்கிருந்த சில மிதிவண்டிகளும் தீக்கிரையாயின.

போலீசார் தீவிர விசாரணை

விபத்துக்குள்ளான காரின் உரிமையாளர், விபத்து நடப்பதற்கு 15 நாட்களுக்கு முன்புதான் காரில் புதிய சிஎன்ஜி கிட் பொருத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து பதேகஞ்ச் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிலிண்டர் வெடித்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கார் தீப்பற்றி எரிந்து சிலிண்டர் வெடித்துச் சிதறும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X