

புதுடெல்லி,
கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கார்பன் உமிழ்வு (வெளியேற்றம்) இந்த ஆண்டு 8 சதவீதம் வரை குறையும் என்று சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு பிந்தைய வணிக செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத் துறையின் இணைச் செயலாளர் சுஜித் குமார் பாஜ்பாய் கூறியதாவது: கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய சாவல்களை நமக்கு அளித்துள்ளது. பொருளாதாரத்தை தொடங்குவதற்கும், புதிய திட்டங்களை உருவாக்கி பொருளாதாரத்தை, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுசூழலில் கவனம் செலுத்துவதற்கும் ஒரு வாய்ப்பு அளித்துள்ளது.
நமது அன்றாட வாழ்வில், நம்மைச் சுற்றி உள்ள இயற்கை மற்றும் மற்ற உயிரினங்களும் வாழ்ந்து வருவதை நாம் உணர வேண்டும்.
இந்தியா முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கார்பன் வெளியேற்றம் நடப்பு ஆண்டு 8 சதவிகிதம் வரை குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
மருந்துகள் , கட்டுமானத்துறை, விவசாயம், உணவு, பானங்கள் ஆகியவற்றிற்கு இயற்கை முக்கிய வளமாக உள்ளது. அதிக அளவு இவைகள் இயற்கையை சார்ந்தே உள்ளன. பல காரணங்களால் நாம் உயிரினங்களை இழந்து வருகிறோம், பல அழிந்துவிட்டன, இது சுற்றுச்சூழல் அமைப்பை சீர்குலைத்துள்ளது என்றார்.