

புதுடெல்லி
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதனை தொடர்ந்து ஈரான் நடத்தி வரும் பதிலடி தாக்குதல்களால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது. இதனால், பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. எனினும், பரஸ்பர நட்பு அடிப்படையில் இந்தியா உள்ளிட்ட நேசக்கரம் நீட்டிய நாடுகளுக்கு, கப்பல் போக்குவரத்துக்கான அனுமதியை ஈரான் அளித்து வருகிறது.
இந்நிலையில், எல்.பி.ஜி. வாயுவை சுமந்து கொண்டு அப்போலோ ஓசன் என்ற சரக்கு கப்பல் புதிய மங்களூர் துறைமுகத்திற்கு இன்று வந்தடைந்து உள்ளது. இதனால், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தேவையான எல்.பி.ஜி. வாயு கிடைப்பதில் உள்ள சிக்கல் தளர்வடைந்து, வினியோகத்திற்கான பாதிப்பு குறைந்துள்ளது. வியட்நாம் கொடியுடன் பயணித்து வந்த அந்த கப்பல், புதிய மங்களூர் துறைமுகத்தில் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டு உள்ளது.
ஏற்கனவே 92,712 டன் எல்.பி.ஜி.யுடன் ஷிவாலிக் மற்றும் நந்தாதேவி ஆகிய இரு கப்பல்கள், இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சமீபத்தில் வந்து சேர்ந்தன. அவற்றுடன் ஜெக வசந்த் மற்றும் பைன் கியாஸ் ஆகிய இரு கப்பல்களும் 92,612.59 டன் எல்.பி.ஜி.யுடன் இந்தியாவை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றன.