

புதுடெல்லி,
கர்நாடக அனைத்து கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவேகவுடா, காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக நீர்வளத்துறை மந்திரி சிவக்குமார் மற்றும் பல கட்சிகளை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். தமிழகத்தை சேர்ந்த இவர், கர்நாடக மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டவர்.
கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரி சதானந்தா கவுடா நிருபர்களிடம் கூறுகையில், மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இதனால் நாடாளுமன்றம் முடங்குகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 27-ந் தேதி கர்நாடக மாநில எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அறவழியில் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம் என்றார்.