

புதுடெல்லி,
வங்கிகளில் மக்கள் பெற்ற கடன்களுக்கான மாதத்தவணையை கொரோனாவால் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதை மீறி வங்கிகள் கடன் பெற்றவர்களிடம் இருந்து தொடர்ந்து வட்டி வசூலிப்பதாக கூறி, அதை ரத்து செய்யக்கோரி கஜேந்திர சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
சிறிய அளவிலான கடன் பெற்றவர்களுக்கு மார்ச் முதல் ஆகஸ்டு வரையிலான 6 மாதத்திற்கான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது என மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அரிமா சுந்தரம் உள்ளிட்டோர் ஆஜராகினர். இந்திய வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் மூத்த வக்கீல் ஹரீஸ் சால்வே ஆஜரானார்.
மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ரிசர்வ் வங்கி சார்பில் மூத்த வக்கீல் வி.கிரி ஆஜராகி, காமத் கமிட்டியின் அறிக்கையை கூடுதல் பிரமாண பத்திரத்தில் சேர்த்து தாக்கல் செய்கிறோம். இதற்கு ஓரிரு நாட்கள் அவகாசம் தேவை என வாதிட்டனர்.
வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஊரடங்கு காலத்தில் வங்கி கடன்களுக்கு வட்டிக்கு வட்டி விதிப்பதால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண கூறியிருந்தோம். இது தொடர்பாக மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கி, பிற வங்கிகள் எடுக்கும் முடிவுகள் குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய கடந்த மாதம் 10-ந் தேதி உத்தரவிட்டோம். ஆனால், உத்தரவில் தெரிவிக்கப்பட்டதை போல அனைத்து தகவல்களும் மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் இடம்பெறவில்லை.
எனவே, கூடுதல் விவரங்களுடன் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. வருகிற 9-ந் தேதிக்குள் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர்களுக்கு அதை வழங்க வேண்டும். வழக்கு விசாரணையை வருகிற 13-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.