கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு: சுப்ரீம்கோர்ட்டு இன்று முக்கிய உத்தரவு?

அரசு-கவர்னர் மோதல் போக்கால் மாநிலத்துக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்திருந்தது.
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு: சுப்ரீம்கோர்ட்டு இன்று முக்கிய உத்தரவு?
Published on

புதுடெல்லி,

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார் என்றும், இத்தகைய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவும் இல்லை என்றும், அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவுக்கு இது எதிரானது என்றும் குறிப்பிட்டு சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு முதலில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, இந்த இவிவகாரம் தீவிர கவலைக்குரியது என தெரிவித்திருந்தது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு மற்றொரு ரிட் மனுவையும் சுப்ரீம்கோர்டில் தாக்கல் செய்தது. அதில், தமிழக பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் நியமனங்களில் யுஜிசி தலைவரையும் சேர்க்க கவர்னர் வலியுறுத்துகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன் தினம் விசாரித்தது. விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், 'இந்த விவகாரத்தால் மாநில அரசும், மக்களும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்' என குறிப்பிட்டனர்.

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், 'அரசியலமைப்பு சட்டத்தின் 200-வது பிரிவின் படி சட்டசபையில் 2-வது முறையாக இயற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு கவானர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். முதன் முறையாக அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் கவர்னர் அவற்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க முடியும். ஆனால், ஒப்புதல் அளிக்க மறுத்து சட்டமன்றத்துக்கு திருப்பி அனுப்பப்படும் மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு கிடைக்கப்பெறும் மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க முடியாது.

மாநில அமைச்சரவையின் ஆலோசனைபடியே கவர்னர் நடக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்துக்கு கட்டுப்பட்டு கவர்னர் நடந்துகொள்ள வேண்டும், சட்ட விதிகளை அவர் மீற முடியாது. சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என தீர்ப்பு கூறியதை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்திவைத்ததைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு முதல்-அமைச்சர் கடந்த மார்ச் 23-ந்தேதி கடிதம் எழுதினார். இருப்பினும் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க கவர்னர் மறுத்துவிட்டார்.

குற்றவாளி என்ற தீர்ப்புதான் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதே தவிர, ரத்து செய்யப்படவில்லை என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு புதிய விளக்கம் அளித்தார். பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்ததற்கு எதிராகவும், பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னருக்கு உத்தரவிடக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்' என்று தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், 'ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்த மசோதாக்கள் எவை?' என்று கேட்டனர். அதற்கு மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, 'தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக திருத்த மசோதா, பல்கலைக்கழக சட்ட (சென்னை பல்கலைக்கழகம் நீங்கலாக) அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் திருத்த மசோதா, தமிழ்நாடு அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக திருத்த மசோதா ஆகியவற்றை அனுப்பி வைத்துள்ளார்.

இதில், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் மசோதாக்கள் -தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா (12), தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா(18) ஆகும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்த மசோதா பல்கலைக்கழகங்களின் சட்ட திருத்த மசோதாவாகும்' என்றார்.

இதையடுத்து, 'ஜனாதிபதிக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ள மசோதாக்கள் மீது அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன?, எதன் அடிப்படையில் கவர்னர் ஜனாதிபதிக்கு மசோதாக்களை அனுப்பி வைக்க முடியும்?. கவர்னர் ஏன் மசோதாக்கள் தொடர்பாக முடிவு எடுக்க முடியவில்லை?' என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, 'ஒரே உறையில் 2 கத்திகள் இருக்க முடியாது. கவர்னர் சூப்பர் முதல்வராக செயலாற்ற முடியாது. பொதுப்பட்டியலிலுள்ள விவகாரங்கள் தொடர்புடைய மசோதாக்களை மட்டுமே கவர்னர் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க முடியும். இதுபோன்ற கவர்னரின் செயல்பாடுகள் கேரளா, பஞ்சாப் போன்ற சில மாநிலங்களில் மட்டுமே தொடர்வதால், ஆட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஏற்கனவே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை பலனற்று போகச் செய்யும் வகையில் கவர்னர் மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரும் அனுமதியை வழங்காமலும், 4 கைதிகளின் முன்விடுதலை தொடர்பான கோப்புகள் குறித்தும் முடிவு எடுக்காமலும் கவர்னர் உள்ளார்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதபட்சத்திலும், பண மசோதாவாக இல்லாதபட்சத்திலும் அவற்றை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும், இல்லையென்றால் அரசியலமைப்பு சாசன சட்டம் கேலிக்கூத்தாகி விடும். அரசியலமைப்பு சாசனத்தின் 200-வது பிரிவில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு சொல்லையும் கவர்னர் மீறியுள்ளார்.

கவர்னர் மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது சட்ட விரோதமானது என்றும், மசோதாக்கள் தொடர்பாக ஜனாதிபதி எடுத்த முடிவு செல்லாது என அறிவிக்கவும், 10 மசோதாக்களையும் மீண்டும் கவர்னரிடமே மத்திய அரசு ஒப்படைக்கவும், அவற்றுக்கு அரசமைப்பு சட்டத்தின் 200-வது பிரிவின் படி ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிடவும் வேண்டும்' என வாதிட்டார்.

மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, 'திடீரென ஒருநாள் அமைச்சரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளதாக கவர்னர் தெரிவித்தார். அமைச்சரவையின் ஆலோசனையின் படி கவர்னர் செயல்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற வடிவிலான ஆட்சியில் அமைச்சரவையின் ஆலோசனையின் படியே அவர் செயலாற்ற வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் முதல்-அமைச்சரை கவர்னர் அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி தெரிவித்தது.

இதன் அடிப்படையிலும், கவர்னர் அழைத்ததன்பேரில் முதல்-அமைச்சரும் கவர்னர் மாளிகைக்கு தேநீர் விருந்துக்கு டிசம்பர் 30-ந்தேதி சென்றார். அமைச்சரவையின் ஆலோசனையின் படி கவர்னர் நடக்க வேண்டும் என்பதையும் கோரிக்கை மனுவில் தெரிவித்தார். ஆனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. தமிழ்நாடு கவர்னர் தன்னிச்சையாக செயல்படக்கூடாது. அமைச்சரவையின் ஆலோசனையின் படியே நடக்க வேண்டும்' என வாதிட்டார்.

இந்த சூழலில் இந்த வழக்கை நீதிபதிகள் இன்று (வியாழக்கிழமை) விசாரிப்பதாக தெரிவித்தனர். மேலும் இவ்விவகாரங்கள் குறித்து தமிழ்நாடு அரசுடன் பேசி 24 மணி நேரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தியிருந்தநிலையில் இன்று வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், சுப்ரீம்கோர்ட்டில் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com