

திருவனந்தபுரம்,
பெரிய வழக்குகளாக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என கேரள முதல்-மந்திரி வி.டி.சதீசன் கூறியுள்ளார்.
கேரளத்தில், கொச்சின் மினரல்ஸ் ரூடைல் நிறுவனம் (சி.எம்.ஆர்.எல்.) எனும் நிறுவனத்தின் மூலம் ரூ.2.78 கோடி மோசடி செய்ததாகக் கூறி முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் மருமகன் முகமது ரியாஸ் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் கூறி முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கேரள மாநில காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டுமென பாஜக தலைவர் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்-மந்திரி வி.டி. சதீசன், “அரசியல் கட்சிகள் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து பணத்தைப் பெறுவது வழக்கமானதே. ஆனால், இது ஒரு மாறுபட்ட வழக்கு. அமலாக்கத் துறை பல வழக்குகளை மாநில உள்துறைக்கு குறிப்புக்காக அனுப்பியுள்ளது.
பெரிய வழக்குகளாக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும். மாநில அரசுக்கு எதிராக சிபிஎம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை எழுப்புகிறது. நாங்கள் சட்ட ரீதியான ஆய்வை மேற்கொண்டு சட்டப்படி செயல்படுவோம்.
பணமோசடி தடுப்புச் சட்ட விவகாரங்கள் தொடர்பாக அமலாக்கத் துறை அணுகியுள்ளது. ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியபோது காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களைத் தாக்கவில்லை. அரசாங்கம் சட்டத்துக்கு உட்பட்டே செயல்படும். மாநில அரசுக்கு மத்திய அரசு அனுப்பும் கடிதத்தை சட்ட ரீதியாக மட்டுமே கையாள முடியும் என்று தெரிவித்துள்ளார்.