

புதுடெல்லி:
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி நேற்று பேரணி நடத்தினர்.
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியாகச செல்ல ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் திட்டமிட்டனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பேரணியாக சென்ற ராகுல் உள்ளிட்ட எம்பிக்கள், அகில இந்திய வானொலி அலுவலக வளாகத்திற்குள் சென்றனர். அங்கும் நீண்ட நேரம் அமர்ந்து இருந்த நிலையில், போலீசார், அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களை போலீசார் விடுவித்தனர்.
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியை சந்திக்க இந்தியா கூட்டணி எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக, அனுமதியின்றி வானொலி அலுவலக வளாகத்திற்குள் சென்றத குற்றச்சாட்டின் அடிப்படையில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.