டெலிகிராம் மீதான தற்காலிக தடையை எதிர்த்து வழக்கு - டெல்லி ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு

டெலிகிராம் செயலியை முடக்கியது ஏற்றுக்கொள்ள முடியாது என டெல்லி ஐகோர்ட்டில் வாதிடப்பட்டது.
டெலிகிராம் மீதான தற்காலிக தடையை எதிர்த்து வழக்கு - டெல்லி ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி,

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், அரசு விதித்த தற்காலிக தடையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் டெலிகிராம் நிறுவனத்தின் தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. அந்த மனு டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக நீட் மறுதேர்வை முன்னிட்டு, வினாத்தாள் கசிவை தடுக்கும் நடவடிக்கையாக டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தேஜஸ் கரியா விசாரித்தார்.

இந்த விசாரணையின்போது டெலிகிராம் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்குறிஞர், நீட் வினாத்தாள் கசிவு தொடர்புடைய லிங்க்குகளை ஒரு மணி நேரத்திற்குள் அழித்ததாகவும், சில லிங்க்குகளை அழிக்க பெறப்பட்ட மெயில் தொடர்பாக நடவடிக்கை எடுத்து உடனடியாக அது தொடர்பான விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

மேலும் டெலிகிராம் செயலி முடக்கப்பட்டதால் ஆசிரியர்கள், மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒன்றரை கோடி பயனாளர்களை கொண்டுள்ள டெலிகிராம் செயலியை முடக்கியது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வாதிடப்பட்டது.

அதே சமயம், மத்திய அரசு சார்பில் இன்று விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், டெலிகிராம் செயலி தற்போது சைபர் கிரிமினல் குற்றவாளிகளும், பயங்கரவாதிகளும் பயன்படுத்தும் கூடாரமாக மாறியுள்ளது என்றும், டெலிகிராம் செயலியை தற்காலிகமாக முடக்கியது சரி என்றும் சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தேஜஸ் கரியா, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com