

திருவனந்தபுரம்,
கேரளாவில் 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பிரபல பெண் யூடியூபர் ஒருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கேரள காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் 11 வயது சிறுவன். யூடியூபில் லட்சக்கணக்கான பாலோவர்களைக் கொண்டு, உத்வேகம் அளிக்கும் பேச்சுகளால் கவனம் பெற்ற பெண் யூடியூபர் டாக்டர் நிஷா ரபேல் என்பவர் தனக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக இந்த சிறுவன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் நேற்று (வியாழக்கிழமை) மேற்கு திருச்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சிறுவனுக்கு திருச்சூர் அரசு பொது ஆஸ்பத்திரியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில், பாலியல் ரீதியான பாதிப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இன்று (வெள்ளிக்கிழமை) பிரபல யூடியூபர் நிஷா ரபேல் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இருப்பினும், தன் மீதான இந்த குற்றச்சாட்டுகளை டாக்டர் நிஷா முற்றிலும் மறுத்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பான முந்தைய பகை மற்றும் சொத்து விவகாரங்கள் காரணமாகவே, திட்டமிட்டு தன் மீது இந்த தவறான புகார் அளிக்கப்பட்டதாக அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பொருளாதாரத் துறை ஆசிரியையாகப் பணியாற்றி, யூடியூப் மூலம் பிரபலமாக இருக்கும் நிஷா ரபேல் மீதான இந்த வழக்கு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.