

புதுடெல்லி,
பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது.
முன்னதாக கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பல மாநிலங்கள் பள்ளி பொதுத்தேர்வுகளை ரத்து செய்துவிட்டன. இதேபோல், கல்லூரி தேர்வுகளையும் ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துவிட்டன. ஆனால் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களையும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்று யுஜிசி அறிவித்தது.
அத்துடன் செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி, பல்கலைக் கழகங்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் அறிவித்தது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. யுஜிசி.யின் இந்த முடிவை எதிர்த்து, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்கள்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்துவிட்டது. கடந்த 18ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்கில் நீதிபதி அசோக் பூஷன் அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில் பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும், கொரோனா அச்சுருத்தல் காரணமாக இறுதியாண்டு தேர்வுகளை மாநில அரசுகள் தள்ளி வைக்கலாம் என்றும், மாநில அரசுகள் தேர்வுகள் நடத்தாமல் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்காதீர்கள் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.