இந்திய தேர்தல் ஆணைய நியமனங்கள் தொடர்பான வழக்கு; மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்

நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
சுப்ரீம் கோர்ட்டு
Published on

புதுடெல்லி

இந்திய தேர்தல் ஆணையத்தில் நியமனங்கள் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

இந்திய தேர்தல் ஆணையத்தில் பதவி வகிக்கும், தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் தேர்தல் ஆணையாளர்களை தேர்ந்தெடுக்கும் குழு தொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 2-ந்தேதி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு சார்பில் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது.

3 பேர் குழு

அதில், தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் தேர்தல் ஆணையாளர்களின் நியமனங்கள் அனைத்தும் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்படும். பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகிய 3 பேர் கொண்ட குழுவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி இந்த நியமனங்களை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன.

அரசியல் சாசன அமர்வு

5 நாட்களாக நடந்து வந்த இந்த விசாரணையின் முடிவில், நீதிபதி தத்தா கூறும்போது, நாங்கள் இருவரும் ஒருமித்த தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தால், அது அமைப்பின் ஒற்றுமையின் நலனுக்கான ஒன்றாக இருந்திருக்கும். துரதிர்ஷ்டவசத்தில், அதில் கருத்து வேறுபாடு உள்ளது. அதனால், நான் இன்னும் விரிவான உத்தரவை எழுத வேண்டியிருந்தது என்று கூறினார்.

இந்த மனுக்கள் அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது என்றும், மனுக்கள் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்த விசயங்களை அவர் நிராகரித்து உள்ளார்.

நீதிபதி சூர்ய காந்த்

ஆனால், நீதிபதி சர்மா இதற்கு மாறுபட்ட விசயங்களை முன்வைத்துள்ளார். ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த விவகாரம் அனுப்பி வைக்கப்படலாம் என்று கூறினார். இதனால், நீதிபதிகள் இருவரும் இந்த விசயத்தில் மாறுபட்ட முடிவில் உள்ளனர்.

எனினும், இந்த விவகாரத்தில் அரசியல் சாசன அமர்வு ஒன்றை அமைப்பதற்கான முடிவை எடுப்பதற்காக, இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்துக்கு இந்த விவகாரத்தினை அனுப்பி வைக்க, நீதிபதிகள் இருவரும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com