

புதுச்சேரி,
சகோதரரை தாக்கிய விவகாரம் தொடர்பாக புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் அமைச்சர் மரியவில்சன் ஆஜரானார்.
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் 8.8.2022ல் புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குளோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். புதுச்சேரி முதலாவது குற்றவியல் கோர்ட்டில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை பெற ஆஜராக உத்தரவிட்ட போதும் அமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இந்த சூழலில் வழக்கை விசாரித்து வந்த புதுச்சேரி முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு சேரலாதன் மாகிக்கு மாற்றப்பட்டார். இந்த சூழலில் கடந் த 31-ம்தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் ஆஜரான வக்கீல் தமிழகத்தில் சட்டசபை நடப்பதால் நிதி அமைச்சரால் ஆஜராக முடியவில்லை எனத்தெரிவித்தார்.
2-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு சந்திரசேகர் இந்த நீதிமன்றத்துக்கு பொறுப்பு வகித்ததால் அவர் விசாரித்தார். அப்போது அமைச்சரின் சகோதரர் தரப்பு வக்கீல் பிரவீன் வழக்கை ஐகோர்ட் உத்தரவுப்படி விரைந்து விசாரிக்க அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து வழக்கை 4-ந் தேதிக்கு (இன்றைக்கு) மாஜிஸ்திரேட் தள்ளிவைத்திருந்தார்.
இந்நிலையில் சகோதரரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் அமைச்சர் மரியவில்சன் இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜரானார்.