

பெங்களூரு,
ரிசர்வ் வங்கியில் இருந்து கிடைக்கும் பணத்தில் பங்கு கொடுப்பதாக ஏமாற்றி பெண்ணிடம் ரூ.3 கோடியை நூதன முறையில் மோசடி செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஆந்திராவை சேர்ந்தவர் குமுதா. இவர் பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் தனது கணவர், மகன் ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குமுதாவின் மகன், மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியானார். இதனால் அவர் தனது வீட்டில் பூஜைகள் செய்ய முடிவு செய்தார்.
இதையடுத்து அவர் தனக்கு வீட்டுக்கடன் பெற்றுத்தந்து உதவிய அப்சர் பாஷா என்ற பாபாவை நாடினார். முதலில் அவர் வீட்டில் துக்க நிகழ்ச்சிகள் நடக்காமல் இருக்க தோஷம் கழிக்க வேண்டி இருப்பதாகவும், அதற்காக பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் கூறினார். மேலும் பூஜைக்கு ரூ.8 லட்சம் செலவாகும் என்றும் பாபா தெரிவித்தார்.
அவர் கூறியதை நம்பிய குமுதா, ரூ.8 லட்சம் செலவில் தனது வீட்டில் பூஜைகளை செய்தார். அந்த பூஜைகளை பாபாவே நடத்தினார். பூஜை அவரது கூட்டாளிகள் சங்கர், பரத் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த நிலையில் குமுதாவிடம், ரிசர்வ் வங்கியில் இருந்து தங்களுக்கு ரூ.500 கோடி கிடைக்க உள்ளது, அதற்காக நீங்கள் ரூ.3 கோடி கொடுத்தால் உங்களுக்கு ரூ.10 கோடியை நாங்கள் பங்குத்தொகையாக திரும்ப கொடுப்போம் என்று கூறி ஆசை காட்டினர். அவர்கள் கூறியதை உண்மை என நம்பிய குமுதா ரூ.3 கோடி கொடுக்க ஒப்புக்கொண்டார். மேலும் சாம்ராஜ்பேட்டையில் உள்ள தனது வீட்டை ரூ.9 கோடிக்கு விற்றார். அதன்மூலம் பாபா உள்ளிட்ட 3 பேரிடமும் ரூ.3 கோடியை குமுதா கொடுத்தார்.
பணத்தை பெற்ற பின் பாபா உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து குமுதாவுக்கு ரூ.9 கோடி கொடுக்காமலும், அவர் கொடுத்த ரூ.3 கோடியை திரும்ப கொடுக்காமலும் மோசடி செய்துவிட்டனர். இதுதொடர்பாக குமுதா அவர்களிடம் கேட்டபோது, 3 பேரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் குமுதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.