

புதுடெல்லி,
மேற்கு வங்காள மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி(எஸ்.ஐ.ஆர்) மேற்கொள்வது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, அடிப்படையில் வழக்கறிஞரான மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அவரே ஆஜராகி வாதாடினார்.
அப்போது மம்தா பானர்ஜி, “எங்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு பல கடிதங்கள் எழுதியும் எந்த பதிலும் இல்லை. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கவே எஸ்.ஐ.ஆர் பெயரை சேர்க்க அல்ல.
மாநில அரசின் ஆவணங்களை பெற தேர்தல் ஆணையம் மறுக்கிறது. பெயர் நீக்கும் வேலையை செய்கிறார்கள். விதிகளை மீறி செயல்படுகிறது. அசல் ஆவணங்களை கூட அதிகாரிகள் நிராகரிக்கின்றனர். மக்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும்” என்று வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள், “தேர்தல் ஆணையத்திற்கு பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு வாக்காளர்களும் விடுபடக் கூடாது என்பதே நீதிமன்றத்தின் நிலைப்பாடு” என்றனர்.
இதையடுத்து தலைமை நீதிபதி, “உள்ளூர் பேச்சு வழக்குப் பெயர்களை, ஆங்கிலத்தில் மாற்றும்போது எழும் எழுத்து(Spelling) முரண்பாடுகள் நாடு முழுவதும் பிரச்சினையாக உள்ளது. இதை தேர்தல் ஆணையம் எப்படி சரி செய்யப் போகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து தேர்தல் ஆணையம் தரப்பில், “என்ன சிக்கல்கள் உள்ளது என்பதை ஆய்வு செய்கிறோம். வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், “எல்லாவற்றுக்கும் ஒரு காலவரம்பு உள்ளது. மெத்தனமாக செயல்படுவதை ஏற்க முடியாது. வழக்கை ஒத்திவைக்கவும் முடியாது” என்று தெரிவித்தனர். மேலும், மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கு மீது 2 நாட்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.