கொல்கத்தாவில் கல்லூரி மாணவர் சங்க அறையில் கட்டுக்கட்டாக பணம்-துப்பாக்கி கண்டுபிடிப்பு

பல ஆண்டுகளாக மாணவர் சங்கத் தேர்தல்கள் நடத்தப்பட வில்லை என்று கூறப்படுகிறது.
கொல்கத்தாவில் கல்லூரி மாணவர் சங்க அறையில் கட்டுக்கட்டாக பணம்-துப்பாக்கி கண்டுபிடிப்பு
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா அருகே சியால்தா பகுதியில் சுரேந்திர நாத் கல்லூரி உள்ளது. கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் சங்க அறையில் நேற்று கொசு ஒழிப்பு பணி நடந்தது. அப்போது உடமைகள் வைக்கும் 2 டிராலி சூட்கேஸ்களில் இருந்து கரையான் அரித்த ரூபாய் நோட்டுகள் வெளியே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பைகளை திறந்து பார்த்தபோது கரையான் அரித்த நிலையில் ஏராளமான 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் பல இருந்தன. மீட்கப்பட்ட பணத்தின் அளவு குறித்து அதிகாரப்பூர்வமான மதிப்பீடு எதுவும் வெளியிடப்படாத நிலையில், பல் வேறு தரப்பினரின் தகவல்களின்படி அதன் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தகவல் கிடைத்ததும் அருகில் உள்ள முச்சிபாரா போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ் குழு விரைந்து சென்று அந்த சூட்கேஸ்களை கைப்பற்றியது. அந்த பணம் எப்போது, எதற் காக இங்கே கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டு இருந் தது என்பது பற்றிய விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மழைக்காலத்துக்கு முந்தைய துப்புரவுப் பணியின் ஒரு பகுதியாகக் கொல்கத்தா மாநகராட்சி அதிகாரிகள் கல்லூரிக்கு வந்தபோது, கல்லூரியின் உடற்பயிற்சி கூடத்திற்கு அருகில் பூட் டப்பட்டிருந்த அறையை திறந்தபோது இந்த சூட்கேஸ்கள் இருந்தன என்றும், சுத்தம் செய்தபோது ரூபாய் நோட்டுகள் வெளியே வந்ததும் தெரியவந்துள்ளது.

கல்லூரி பொறுப்பாசியர் பூர்ணேந்து பிரகாஷ் பால் என்பவர் இதுகுறித்து வெளியிட்ட தகவலில், "பணம் கல்லூரி கட்டிடத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள ஊழியர்களுக்கான குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்டதாக” கூறினார்.. மேலும், "மாணவர் சங்க அறையின் உள்ளே, கருப்பு நிற பாலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டதாக" அவர் கூறினார்.

பல ஆண்டுகளாக மாணவர் சங்கத் தேர்தல்கள் நடத்தப்பட வில்லை என்றும், ஜூலை 2025-ல் கொல்கத்தா ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து மாணவர் சங்க அறை பூட் டப்பட்ட நிலையிலேயே இருந்து வருவதாகவும் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். சுரேந்திரநாத் மாணவர் சங்கம் பல கோடி ரூபாயை வசூலித்து வைத்துள்ளதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. சஜல் கோஷ் முதலமைச்சர் சுவேந்து அதிகாரிக்குக் கடிதம் எழுதியிருந்த நிலையில் இந்த பணம் சிக்கியுள்ளதால் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இது தொடர்பாக விசாரிக்க பழைய மாணவர் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக கல்லூரி நிர்வாக அதிகாரி ஒருவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com