கர்நாடகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியது

கர்நாடக அரசின் உத்தரவின் பேரில் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு 90 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை முதல்-மந்திரியாக சித்தராமையா இருந்தபோது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருந்தது. இதற்காக ரூ.180 கோடிக்கு மேல் அரசு செலவு செய்திருந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அரசிடம் வழங்கியும், அது அமல்படுத்தப்படாமல் இருந்தது. 10 ஆண்டுக்கு பின்பு தற்போது சித்தராமையா முதல்-மந்திரி ஆனதும் அந்த அறிக்கையை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் சரியான முறையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவில்லை என்று எதிர்க்கட்சிகளும், பல்வேறு சாதி அமைப்புகளும் கூறியதால், அந்த அறிக்கையை அரசு கிடப்பில் போட்டது. அதற்கு பதிலாக புதிதாக சமூக, பொருளாதார அடிப்படையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சார்பில் நடைபெறும் என்று கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுத்து அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, கர்நாடகத்தில் சமூக, பொருளாதார அடிப்படையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பிற்படுத்தப்பட்ட ஆணையம் சார்பில் வீடு, வீடாக சென்று சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக அரசின் உத்தரவின் பேரில் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு 90 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றும் பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் தலைவர் மதுசூதன் ஆர்.நாயக் தெரிவித்துள்ளார்.






