

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு மாணவனை ஆசிரியை 40 முறை கன்னத்தில் அறைந்து உள்ளார். காலையில் வருகைப்பதிவேடு பரிசோதனையின் போது பதிலளிக்காத காரணத்திற்காக குழந்தையை ஆசிரியை இரக்கமின்றி அடித்து உள்ளார்.
குழந்தை பள்ளியில் ஓவியம் வரைவதில் கவனமாக இருந்த காரணத்தினால் பதிலளிக்க மறந்துவிட்டது. ஆனால் ஆசிரியை கொடூரமான முறையில் தாக்கிஉள்ளார். இது பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது. வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. குழந்தை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றபோதுதான் நடந்த சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்து உள்ளது.
குழந்தையின் முகம் வீக்கமாக காணப்பட்டு உள்ளது, குழந்தை வழக்கமாக இல்லாமல் சோர்வாக காணப்பட்டு உள்ளது, பெற்றோர் விசாரித்ததில் ஆசிரியை அடித்தது தெரியவந்து உள்ளது என போலீஸ் தெரிவித்து உள்ளது.
குழந்தையின் நண்பர்களிடம் பெற்றோர்கள் கேட்டதில் ஆசிரியை 40 முறை கன்னத்தில் அடித்தது தெரியவந்து உள்ளது. இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்து உள்ளனர்.
பள்ளி நிர்வாகம் சிசிடிவி காட்சிகளை பரிசோதனை செய்தபோது, ஆசிரியை ரிதிகா வி ஜான் குழந்தையை தாக்கியது பதிவாகியிருந்தது. குழந்தையின் பெற்றோர் புகாரின்பெயரில் போலீஸ் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளது.