தெருவில் நடந்து சென்றவரை முட்டிக்கொன்ற காளை

தெருவில் சுற்றித்திரிந்த காளை , சுசிலை தாக்கியது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் சர்தார் கொட்வாலி பகுதியை சேர்ந்தவர் சுசில் (வயது 42). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றுவிட்டு உறவுக்கார இளைஞர் சுபம் உடன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த தெருவில் சுற்றித்திரிந்த காளை, சுசிலை தாக்கியது. காளை தனது கொம்பால் முட்டி தாக்கியதில், சுசில் தூக்கி வீடப்பட்டார். காளையை இளைஞர் சுபம் விரட்ட முயன்றுள்ளார். ஆனாலும், மிரண்டு ஓடாத காளை சுசிலை கொம்பால் முட்டி தொடர்ந்து தாக்கியுள்ளது. தடுக்க முயன்ற சுபத்தையும் தாக்கியது.
காளை கொம்பால் முட்டியதில் தலை, வயிறு பகுதியில் சுசில் படுகாயமடைந்தார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் காளையை விரட்டிவிட்டு, இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சுசில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுபத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெருவில் நடந்து சென்ற சுசிலை காளை தாக்கியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.






