காவிரி வழக்கு இறுதி விசாரணை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வக்கீல் வாதம்

காவிரி வழக்கு இறுதி விசாரணையின் போது தமிழக அரசு வக்கீல், நடுவர்மன்ற தீர்ப்புக்கு பிறகும் தமிழக விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை என்றார்.
காவிரி வழக்கு இறுதி விசாரணை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வக்கீல் வாதம்
Published on

புதுடெல்லி,

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

கர்நாடகம் மற்றும் கேரளா அரசுகள் தரப்பிலான வாதங்கள் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், தமிழக அரசு தரப்பிலான இறுதி வாதங்கள் நேற்று தொடங்கின. தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, வக்கீல்கள் ஜி.உமாபதி, சி.பரமசிவம் ஆகியோர் ஆஜரானார்கள். சேகர் நாப்டே வாதாடுகையில் கூறியதாவது:-

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை கர் நாடக அரசு எந்தவகையிலும் மதிக்கவில்லை. நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அரசிதழில் பல ஆண்டுகள் கழித்து மத்திய அரசு வெளியிட்டது. அதுவும் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பிறகே அரசிதழில் வெளியிடப்பட்டது.

காவிரி நடுவர் மன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் கர்நாடக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது. நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசும் மதித்து நடக்கவில்லை.

அவர் இவ்வாறு கூறியதும் குறுக்கிட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா, மத்திய அரசு தரப் பிலான வாதங்கள் முன்வைக்கப்படும் போது இது குறித்து கோர்ட்டுக்கு விளக்க வேண்டும் என்று கோர்ட்டில் ஆஜராகியிருந்த சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமாரிடம் கூறினார்.

அதன்பிறகு சேகர் நாப்டே தொடர்ந்து வாதாடுகையில் கூறியதாவது:-

இரு மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீடு மற்றும் அது தொடர்பான கட்டுப்பாடு நடுவர்மன்றத்தின் பொறுப்பில் உள்ளது. அந்த நடுவர் மற்றத்தின் இறுதி தீர்ப்பு செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது மத்திய அரசாகும். நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அதனை தொடர்ந்து தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முடிவுகளை செயல் படுத்த மத்திய அரசு மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். அந்த மேலாண்மை வாரியம் நடுவர் மன்றம் முடிவு செய்த நீர்ப்பங்கீட்டு அளவை மாற்றி அமைக்க முடியாது.

தற்போது நீர்ப்பங்கீடு குறித்து இரு மாநிலங்களுக்கு இடையே பிணக்கு உள்ளது. காவிரி நீரை தனக்கென்று யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும், மத்திய அரசின் உத்தரவையும் நிறைவேற்ற முன்வரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாநிலத்தை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும்.

நடுவர் மன்றங்கள் நிரந்தரமானவை அல்ல. ஆனால் நீர்ப்பங்கீடு தொடர்பாக மத்திய அரசு நியமிக்கும் மேலாண்மை வாரியம் நிரந்தரமானது. அதன் உத்தரவு இறுதியானது. ஆனால் இங்கே அதுபோன்ற ஒரு அமைப்பை உருவாக்க ஒரு மாநிலம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. மத்திய அரசு அமைதி காத்து வருகிறது.

தமிழ்நாட்டுக்கு இவ்வளவு தண்ணீர் தினமும் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கிறது. அதனை எதிர்த்து அந்த மாநிலத்தின் மக்கள் தெருவில் நின்று போராடுகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டின் எச்சரிக்கைக்குப் பிறகும் அங்கே எதிர்ப்பும் போராட்டமும் வலுக்கிறது. நீதிமன்றமும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை இந்த நீதிமன்றம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

கர்நாடக மாநிலத்துக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் கீழ்ப்படுகையில் உள்ள விளைநிலங்கள் மற்றும் விவசாயிகளின் நலனையும் கருத்தில் அவர்கள் கொள்ள வேண்டும்.

கர்நாடக அரசின் தரப்பிலான வாதத்தின் உண்மை நிலை முழுமையாக முன்வைக்கப்படவில்லை. அவர் கள் தங்களுக்கு வசதியான விஷயங்களை மட்டுமே முன்வைத்தார்கள். மற்றவர்களின் துயரங்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அவர் கள் மிகவும் சாமர்த்தியமாக நடந்து கொள்கிறார்கள்.

காவிரி நடுவர் மன்றம் பல அடிப்படைகளை, கொள்கைகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் 28 லட்சம் ஏக்கரில் இருந்த பாசனப்பகுதியை 24 லட்சம் ஏக்கர் பாசனப்பகுதியாக கணக்கிட்டது நடுவர் மன்றம். 4 லட்சம் ஏக்கர் பாசனப்பகுதி இதனால் கைவிடப்பட்டது. இது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா? காவிரி நடுவர் மன்றத்தின் அணுகுமுறை மற்றும் கர்நாடகாவின் பிடிவாதம் ஆகியவை தமிழ்நாட்டில் ஏற்கனவே பாசனத்தில் இருந்த பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலத்தின் நலன்கள் மட்டுமே கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. மற்ற மாநிலங்கள் அலட்சியப்படுத்தப்பட்டன. கர்நாடகம் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் வேண்டுகோளை ஏற்க மறுத்து வந்துள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சினை ஏற்படும் சூழலில் மத்திய அரசு குறுக்கிட்டு இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது.

மத்திய அரசு நியமித்த காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு பிறகும் தமிழக விவசாயிகளுக்கு விடிவு காலம் பிறக்கவில்லை. எனவே, சுப்ரீம் கோர்ட்டின் தலையீடு மட்டுமே தமிழகத்துக்கு உரிய பலனை தரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இவ்வாறு சேகர் நாப்டே வாதாடினார்.

தமிழக அரசின் வாதம் இன்றும் (வியாழக்கிழமை) தொடருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com