எனது பதவி காலத்தில் தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரி பிரச்சினை தீர வேண்டும் - மத்திய மந்திரி நிதின் கட்காரி விருப்பம்

எனது பதவி காலத்தில் தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரி பிரச்சினை தீர வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி விருப்பம் தெரிவித்துள்ளார்.
எனது பதவி காலத்தில் தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரி பிரச்சினை தீர வேண்டும் - மத்திய மந்திரி நிதின் கட்காரி விருப்பம்
Published on

ஹாசன்,

கர்நாடக மாநிலம் ஹாசன் டவுன் புதிய பஸ் நிலையம் பகுதியில் நேற்று ரூ. 1,865 கோடி மதிப்பிலான சாலை வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நீர்ப்பாசன துறை மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் கலந்துகொண்டு ரிமோட் பொத்தானை அழுத்தி சாலை பணிகளை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:-

கர்நாடகத்தில் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி பணிகளுக்கு மட்டும் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிக்கு மறைந்த மத்திய மந்திரி அனந்தகுமாரின் பங்கு மிக முக்கியமானது.

தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்க்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனது பதவி காலம் முடிவடைவதற்குள் தமிழகம்-கர்நாடகம் இடையே காவிரி பிரச்சினை தீர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாகும்.

மைசூரு-பெங்களூரு இடையே ரூ.7 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் 8 வழிச்சாலையை அதிநவீன முறையில் மேம்படுத்தப்படும். பெங்களூரு-சென்னை இடையே சாலை வளர்ச்சி பணிக்காக விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இதற்கு கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, நன்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். நாட்டில் உள்ள சாலை வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com