காவிரி விவகாரம் - கர்நாடகா அரசு சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடகா அரசு சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி விவகாரம் - கர்நாடகா அரசு சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு
Published on

புதுடெல்லி,

தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருக தொடங்கி உள்ளன. காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை உடனே திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இது தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவற்றில் முறையிட்டுள்ளன. இதில் தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கோரி கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் தங்களது தேவைக்கே பேதுமான தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும் சூழல் இல்லை என்று கர்நாடகா கூறி வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, அம்மாநில அனைத்துக்கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த இக்கூட்டத்தில் காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர். இதில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி திறந்து விட காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க கோரி கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகம் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் கேட்டபோது எங்களிடம் சொற்ப அளவு தண்ணீர் இருந்தாலும் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டோம். அதன்படி 5 ஆயிரம், 3 ஆயிரம் கன அடி என எங்களால் இயன்ற அளவுக்கு திறக்கப்பட்டது.

தற்போது தண்ணீர் திறந்து விடுவதற்கான சாத்தியமே இல்லை. எங்களுக்கே 120 டி.எம்.சி.க்கு மேல் தேவைப்படுகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது. இதை கருத்தில் கொள்ளாமல், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

காவிரி தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் கர்நாடக அரசு அவசர மனுவை தாக்கல் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com