

புதுடெல்லி,
விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு, தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வப்போது கூடி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. மேலும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் கூடி தண்ணீர் திறப்பு பற்றி விவாதிக்கின்றன.
இதனிடையே, வடகிழக்கு பருவமழை குறைந்து வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களின் பாசன தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. அதேவேளை, காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் கடந்த 20-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது.
இதில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர். தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்க இக்கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.
அதேவேளை, கடந்த 6ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் காவிரியில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது. இந்த இரு உத்தரவுகளையும் கர்நாடக அரசு பின்பற்றவில்லை.
இந்த நிலையில் டெல்லியில் இன்று (25.11.2026) காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது. அதில் விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக இன்று நடந்த 62வது ஆணையக் கூட்டத்தில், புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள பியூஷ் சிங்கிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் பிரசாந்த் வதனாரே வாழ்த்து தெரிவித்தார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக இருந்த எஸ்.கே.ஹல்தார் ஓய்வு பெற்றதை அடுத்து, பியூஷ் சிங் அப்பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.