காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது. #CauveryManagementBoard #CauveryIssues
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவமதிப்பு வழக்கு
Published on

புதுடெல்லி

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்து கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. என்றாலும், ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை செயல்படுத்த ஸ்கீம் (செயல் திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்துமாறு மத்திய அரசுக்கு அப்போது உத்தரவிட்டது.

நடுவர் மன்றம் தனது இறுதித்தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவையும் அமைக்குமாறு கூறி இருந்ததால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அந்த இரு அமைப்புகளையும் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.

ஆனால் கர்நாடக அரசோ, ஸ்கீம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் சுப்ரீம் கோர்ட்டு கூறி இருக்கிறதே தவிர காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உத்தரவிடவில்லை என்று கூறி வருகிறது.

ஆனால் மத்திய அரசு இதுபற்றி இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா? அமைக்கப்படாதா? என்பது பற்றி மத்திய அரசு எதுவும் கூறாமல் மவுனம் காத்து வருகிறது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு விதித்த 6 வார கால கெடு வியழக்கிழமையுடன் முடிவடைந்தது. காவிரி மேலாண்மை அமைப்பது பற்றி மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதனால், அடுத்த கட்டமாக சட்ட ரீதியாக என்னென்ன நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி , அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடருவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் ஏற்கனவே கடந்த 27-ந் தேதி டெல்லி சென்று, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவையும் உடனே அமைக்கவேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துவிட்டு சென்னை திரும்பினார்கள்.

அவர்கள் இருவரும்நேற்று இரவு இரவு மீண்டும் டெல்லி சென்றார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று காலை கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com