

புதுடெல்லி,
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 60-வது கூட்டம் வரும் 23-ம் தேதி (இன்று) டெல்லியில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீர் பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வப்போது கூடி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நீர முழுமையாக வழங்கப்படாத நிலையில் தமிழ்நாடு அரசு இதுகுறித்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டுக்கு 15 நாட்கள் என்ற கணக்கீட்டில் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு காவிரி ஒழுங்காற்றுக்குழுவும், மேலாண்மை ஆணையமும் கூடி, தண்ணீர் திறப்பு பற்றி விவாதிக்கின்றன.
இந்த நிலையில் ஆணையத்தின் 60-வது கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள ஆணையத்தின் அலுவலகத்தில் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு 4 மாநிலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில் காவிரியில் திறக்கப்பட்ட நீர் தரவுகள் அடிப்படையில் விவாதம் நடைபெறுகிறது. மேலும் கர்நாடகாவில் ஹேரங்கி அணையில் நீர் தேக்குவது தொடர்பாக கர்நாடகா ஐகோர்ட்டில் நடைபெறும் வழக்கு தொடர்பாகவும், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் மற்றும் பற்றாக்குறை நீர் தொடர்பாக தமிழக அதிகாரிகள் இந்த கூட்டத்தின் போது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்த உள்ளனர். கூடுதலாக நீர் திறக்க வலியுறுத்தி தமிழக அதிகாரிகள் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் முறையிட உள்ளனர்.