

பெங்களூரு,
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்-மந்திரி குமாரசாமி கடந்த சனிக்கிழமை டெல்லி சென்றார். அங்கு நேற்று முன்தினம் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். அப்போது காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க கூடாது எனவும், இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றும் பிரதமரிடம் அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி ஆகியோரையும் அவர் சந்தித்து கர்நாடக வளர்ச்சிப்பணிகளுக்காக நிதி ஒதுக்கவும், காவிரி விவகாரம் தொடர்பாகவும் கோரிக்கை விடுத்தார்.
நேற்று முன்தினம் இரவு அவர் டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பினார். இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் விஷயத்தில் இயற்றப்பட்டுள்ள ஸ்கீம் கர்நாடகத்திற்கு பாதகமாக உள்ளது. 10 நாட்களுக்கு ஒரு முறை அந்த ஆணையம், அணைகளை ஆய்வு செய்து, தண்ணீர் திறக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிடும். இந்த அம்சம் கர்நாடகத்துக்கு எதிரானது. இதை நீக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கூறி இருக்கிறோம்.
காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த விஷயத்தை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதிக்கப்பட வேண்டும். இதில் இறுதி முடிவு எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு 2 உறுப்பினர்களை நியமிக்குமாறு மத்திய அரசு கூறியது. இது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகள் 2 பேரின் பெயர்களை இறுதி செய்து, அந்த கோப்புவை எனது ஒப்புதலுக்காக அனுப்பினர்.
காவிரி மேலாண்மை ஆணைய விதிமுறைகளில் கர்நாடகத்திற்கு பாதகமான, விஞ்ஞானத்திற்கு மாறான அம்சங்கள் இடம் பெற்று இருப்பதால் அதை நான் நிராகரித்தேன். இதனால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு வந்தாலும் அதை சந்திக்க நான் தயார் என்று அதிகாரிகளிடம் அப்போது கூறிவிட்டேன். சில விஷயங்களை சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துவைக்க நாம் தவறிவிட்டோம். அதுபற்றி இங்கே விவரமாக கூற முடியாது.
ஆயினும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்பை மதிக்க வேண்டியது அனைத்து மாநிலங்களின் கடமை. நாங்கள் எழுப்பிய தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகளை தீர்க்காதபோதும், மத்திய அரசுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிப்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு 2 உறுப்பினர்கள் இன்னும் 2 அல்லது 3 நாளில் நியமனம் செய்யப்படுவார்கள்.
இது மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையாக இருப்பதால், சட்டப்படி இதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்று இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு அதற்கு முன்பே அரசிதழில் வெளியிட்டுவிட்டது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் 6 மாதத்திற்குள் விவாதிக்க வேண்டும். இதில் வரும் முடிவுக்கு காவிரி மேலாண்மை ஆணைய நெறிமுறைகள் கட்டுபட்டது ஆகும்.
இதை மத்திய அரசிடம் நாங்கள் தெரிவித்து உள்ளோம். தமிழ்நாட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 177 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் தமிழ்நாட்டில் மழை நீர் மூலம் அணைகள் நிரம்பினாலும், கர்நாடகம் தண்ணீரை திறக்க வேண்டுமா?. இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டு கூறவில்லை.
இப்போது கபினி அணை நிரம்பிவிட்டது. அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. உபரியாக உள்ள நீரை எங்கே வைத்துக்கொள்வது?. அதனால் அந்த உபரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். அதிகாரிகள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தண்ணீரை திறக்காவிட்டால் அணையின் பாதுகாப்பு என்னவாகும்?.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.