

பெங்களூரு
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. நீர் திறக்கும்படி காவிரி நீர் ஒழுங்காற்று குழு பிறப்பித்த உத்தரவை ஆணையம் உறுதி செய்துள்ளது.
கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு இடையே காவிரி நீர் திறந்து விடுவது தொடர்பான சிக்கல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனை முறைப்படுத்துவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. அதனுடன் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு என்ற மற்றொரு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று கூடியது. காவிரியில் இருந்து ஆகஸ்டு மாதத்தில் திறந்து விடப்படும் தண்ணீர் குறித்து விவாதிப்பதற்கான இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்றனர்.
நடப்பு ஆண்டின் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் 88 டி.எம்.சி. திறக்க வேண்டிய நிலையில் 10 டி.எம்.சி. மட்டுமே இதுவரை திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு ஆகஸ்டு மாதம் 45.5 டி.எம்.சி. நீர் திறந்துவிட வேண்டிய நிலையில் இந்த ஒழுங்காற்று குழு கூட்டம் முக்கியத்துவம் பெற்றது.
இதில், காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு சார்பில் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சூழலில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டமும் இன்று பிற்பகலில் கூடியது.
இதன்படி, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. நீர் திறக்கும்படி காவிரி நீர் ஒழுங்காற்று குழு பிறப்பித்த உத்தரவை ஆணையம் உறுதி செய்துள்ளது.