

புதுடெல்லி
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்து கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. என்றாலும், ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை செயல்படுத்த ஸ்கீம் (செயல் திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்துமாறு மத்திய அரசுக்கு அப்போது உத்தரவிட்டது.
நடுவர் மன்றம் தனது இறுதித்தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவையும் அமைக்குமாறு கூறி இருந்ததால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அந்த இரு அமைப்புகளையும் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.
ஆனால் கர்நாடக அரசோ, ஸ்கீம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் சுப்ரீம் கோர்ட்டு கூறி இருக்கிறதே தவிர காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உத்தரவிடவில்லை என்று கூறி வருகிறது.
ஆனால் மத்திய அரசு இதுபற்றி இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா? அமைக்கப்படாதா? என்பது பற்றி மத்திய அரசு எதுவும் கூறாமல் மவுனம் காத்து வருகிறது.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு விதித்த 6 வார கால கெடு வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. காவிரி மேலாண்மை அமைப்பது பற்றி மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் கடந்த சனிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதை ஏற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வருகிற 9 ந்தேதி, விசாரணை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
காவிரி விவகாரம்: தமிழகத்திற்கு இது பெரிய பிரச்சினை தான், தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உறுதி அளித்தார்.