காவிரி நடுவர் மன்றம் வழங்கியதிலிருந்து கர்நாடகாவுக்கு 14.75 டிஎம்சி நீர் கூடுதல்; தமிழகத்திற்கு குறைவு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

காவிரி நடுவர் மன்றம் வழங்கியதிலிருந்து கர்நாடகாவுக்கு 14.75 டிஎம்சி நீர் கூடுதலாகவும் தமிழகத்திற்கு குறைத்தும் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. #SupremeCourt #CauveryWater #CauveryVerdict
காவிரி நடுவர் மன்றம் வழங்கியதிலிருந்து கர்நாடகாவுக்கு 14.75 டிஎம்சி நீர் கூடுதல்; தமிழகத்திற்கு குறைவு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Published on

புதுடெல்லி,

இந்த வழக்கை விசாரித்த நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில் காவிரி நீரில் தமிழகத்தின் பங்கு 419 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கனஅடி) என்றும், கர்நாடகம் ஆண்டு தோறும் தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதே போல் மற்ற மாநிலங்களின் பங்கு எவ்வளவு? என்பதையும் நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு தங்களுக்கு பாதகமாக இருப்பதாக கூறி தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதே போல் கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளும் நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தன.

இந்த மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இறுதி விசாரணை கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி தொடங்கியது. வெவ்வேறு தேதிகளில் 28 நாட்கள் விசாரணை நடைபெற்றது.

தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் சேகர் நாப்டே, ராகேஷ் த்விவேதி, வக்கீல்கள் ஜி.உமாபதி, சி.பரமசிவம், கே.வி.விஜயகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் வெவ்வேறு தேதிகளில் ஆஜராகி 12 நாட்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல்கள் பாலி நாரிமன், ஷரத் ஜாவ்ளி, ஷியாம் திவான், மோகன் கர்த்தார்க்கி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். கர்நாடக அரசு தரப்பிலான வாதங்களை முன்வைக்க அவர்களுக்கு 12 நாட்கள் வாய்ப்பு கிடைத்தது. இதே போல் கேரள அரசின் சார்பில் மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தாவும், புதுச்சேரி அரசின் சார்பில் மூத்த வக்கீல் நம்பியாரும் ஆஜராகி வாதிட்டனர்.

3 நாட்கள் மேலும் பின்னர் அனைத்து தரப்பிலும் இறுதி எதிர் பதில் வாதம் முன்வைக்கப்பட்டது. மத்திய அரசு தரப்பிலான வாதங்களும் முன்வைக்கப்பட்டன. இந்த மேல்முறையீட்டு வழக்கின் மீதான இறுதி வாதங்கள் கடந்த செப்டம்பர் 20-ந் தேதி முடிவடைந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. 2017 செப்.20 இல் அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் 150 நாட்களுக்கு பின் இன்று தீர்ப்பு வெளியாகிறது

வழக்கு தொடர்ந்த 4 மாநிலங்கள் மட்டுமின்றி இந்தியாவே பரபரப்புடன் எதிர்நோக்கி வரும் இந்த மேல்முறையீட்டு வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என அறிவிக்கபட்டது.

125 ஆண்டுகளாக நீடிக்கும் காவிரி பிரச்சனை இன்று முடிவுக்கு வருமா என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க தொடங்கியது.

காவிர் நீர் பங்கீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீர்ப்பை வாசிக்க தொடங்கினர்.

அதன் முக்கிய அமசங்கள் வருமாறு :-

* காவிரிக்கு யாரும் உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமை இல்லை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு. ( காவிரி நீர் எங்களுக்கே என கர்நாடக மாநிலம் சொந்தம் கொண்டாடி வருகிறது).

* காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 177. 25 டிஎம்சி நீரை ஒதுக்கிட்டு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிக்கபட்டது. காவிரி நடுவர் மன்றம் வழங்கியதிலிருந்து கர்நாடகாவுக்கு 14.75 டிஎம்சி நீர் கூடுதலாக வழங்க வேண்டும் (2007 ஆம் ஆண்டு நடுவர் மன்றம் 192 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. இது 14. 75 டிஎம்சி தண்ணீர் குறைவு, தமிழகத்திற்கான காவிரி நீரை 132 டி.எம்.சி-யாக குறைக்க கர்நாடகம் மேல்முறையீடு செய்து இருந்தது)

* தமிழகத்தில் நிலத்தடி நீர் 20 டிஎம்சி இருப்பதால் காவிரியில் நீர் குறைப்பு.

* கேரளா மற்றும் புதுச்சேரிக்கு நதிநீர் பங்கீட்டில் மாற்றம் இல்லை.

* காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படுகின்றன.

* இறுதி தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்.

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட் விதித்த தீர்ப்புக்கு கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com