காவிரி நீர் விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தர விடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்
Published on

புதுடெல்லி,

காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ் நாடு அரசு சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ். வைத்தியநாதன் ஜி.உமாபதி, வக்கீல் பி.கருணாகரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து கடந்த ஜூலை 29-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 12-ந் தேதி வரை திறக்கப் பிறப்பித்த உத்தரவை கர்நாடகம் அமல்படுத்தவில்லை. பிலிகுண்டுலு அளவீட்டின்படி, ஜூன் மாதத்தில் கிடைக்க வேண்டிய 9.140 டி.எம்.சி.க்கு பதிலாக 2.915 டி.எம்.சி.யும், ஜூலையில் 31.240 டி.எம்.சி.க்கு பதிலாக 0.714 டி.எம்.சி.யும், ஆகஸ்டு 9-ந் தேதி வரை 13.341 டி.எம்.சி.க்கு பதிலாக 6.757 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது. ஒட்டு மொத்தமாகப் பெற வேண்டிய 53.721 டிஎம்சிக்கு பதிலாக 10.386 டிஎம்சி நீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது.

12 ஆயிரம் கன அடி நீர்

இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அவசரமாகக்கூட்டுமாறு தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து காவிரிநீர் ஒழுங்காற்று குழு சென்ற 11-ந் தேதி கூட்டப்பட்டது. அதில் ஆகஸ்டு மாதத்திற்குரிய நிலுவை நீர் மற்றும் வழக்கமான நீர் சேர்த்து மொத்தம் 37 டி.எம்.சி. நீரை உடனடியாகத் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுகோரியது. ஆனால், ஆணையம் இதனை ஏற்காமல், 15 நாட்களுக்குவினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை மட்டும், அதாவது 15.552 டி.எம்.சி.நீரை மட்டும் திறக்கப் பரிந்துரைத்தது. இந்த அளவு விவசாயத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை என தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

சம்பா சாகுபடி

சரியான நேரத்தில் நீர் கிடைக்கப்பெற்றிருந்தால், மேட்டூர் அணையின் நீர் இருப்பு 60 டி.எம்.சி.யாக உயர்ந்து சம்பா சாகுபடியைத் தொடங்க ஏதுவாக இருந்திருக்கும். குறுவை சாகுபடி தொடங்கும் பருவம் முடிந்து விட்டதால் இதன் மூலம் சம்பா பயிரானது, அடுத்து வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழையைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அளவிலும், கன மழையைத் தாங்கக்கூடிய அளவிலும் வளர்ந்திருக்கக்கூடும். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, டெல்டாவில் சம்பா சாகுபடியைத் தொடங்குவதற்காக லட்சக்கணக்கான விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விகிதாசார அடிப்படை

எனவே, நிலுவையில் உள்ள மீதி நீரையும், அதைத் தொடர்ந்து வரும் காலத்திற்கான நீரையும் 10 நாட்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் உடனடியாகத் திறந்துவிடவும், நிலுவை நீரான 21.357 டி.எம்.சி. நீரையும், விகிதாசார அடிப்படையில் ஆகஸ்டு 12 முதல் இறுதி வரையிலான மொத்த நீரின் அளவான 37 டிஎம்சி நீரை திறக்க நாள்தோறும் 10 நாள்களுக்கு வினாடிக்கு 21.413 கனஅடி நீரை அதாவது 1.85 டிஎம்சி நீரை கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com