காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு
Published on

புதுடெல்லி,

தமிழ்நாடு, கர்நாடகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையை கண்காணிப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி முறைப்படுத்தும் குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த இரண்டு அமைப்புகளும் அவ்வப்போது கூடி பல்வேறு முடிவுகளை எடுத்து வருகின்றன. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இதுவரை 43 முறை கூடியுள்ளது.

இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 44-வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே ஹல்தார் தலைமையில் டெல்லி பிகாஜி காமா பிளேசில் உள்ள எம்.டி.என்.எல் கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் தொடக்கத்தில் 4 மாநிலங்களிடம் நீரியல் தரவுகள் சேகரிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் இருந்து தரவேண்டிய நீர் விவகாரம், நீர்த் திறப்பு தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இறுதியில், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மேலாண்மை ஆணையம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி ஆற்றில் இருந்து அக்டோபர் மாதத்திற்கு 20.22 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com