

புதுடெல்லி,
காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மத்திய அரசு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது. இதற்கு, மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
ஆனால், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனை அடுத்து, மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டது. மேலும், இதனை உடனே அரசிதழில் வெளியிட வேண்டும், பருவமழை தொடங்குவதற்குள் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
எனினும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அரசிதழில் வெளியிடவில்லை. இந்நிலையில், இதற்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசு வழக்கு தொடரலாம் என கூறப்பட்ட நிலையில், இன்று மாலை அரசிதழில் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் இதனை உறுதிபடுத்தினார்.
அதன்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்தநிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான மத்திய அரசிதழின் நகல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பருவ மழை தொடங்கும் முன் ஆணைய அறிவிப்பை அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. காவிரி ஆணையம் தொடர்பான அரசிதழ் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட உள்ளது.