சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் சம்பந்தப்பட்ட லஞ்ச விவகாரம்: மத்திய மந்திரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு தொடர்பு

சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா சம்பந்தப்பட்ட லஞ்ச விவகாரத்தில், மத்திய மந்திரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரி குற்றம் சாட்டினார்.
சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் சம்பந்தப்பட்ட லஞ்ச விவகாரம்: மத்திய மந்திரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு தொடர்பு
Published on

புதுடெல்லி,

சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் லஞ்ச குற்றச்சாட்டு சுமத்தினர். இதையடுத்து, இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது.

அதை எதிர்த்து, அலோக் வர்மா தாக்கல் செய்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அம்மனு, நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச வழக்கை விசாரித்து வந்த நிலையில் நாக்பூருக்கு மாற்றப்பட்ட சி.பி.ஐ. உயர் அதிகாரி எம்.கே.சின்கா சார்பில் அவருடைய வக்கீல் 34 பக்க மனுவை தாக்கல் செய்தார்.

அதில், எம்.கே.சின்கா பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

இறைச்சி வியாபாரி மொயின் குரேஷி மீதான வழக்கில் ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் சதீஷ் பாபு சனாவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. அதனால், அவரிடம் விசாரணை நடத்தினோம். அப்போது, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பல பெரும்புள்ளிகளின் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அதாவது, கடந்த ஜூன் மாதம், மத்திய நிலக்கரி துறை இணை மந்திரி ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரிக்கு ஆமதாபாத்தை சேர்ந்த விபுல் என்பவர் மூலமாக, கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக சதீஷ் தெரிவித்தார். அதனால், மொயின் குரேஷிக்கு ஆதரவாக, சி.பி.ஐ. உயர் அதிகாரிகளிடம் மத்திய மந்திரி தலையிட்டார்.

மேலும், ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுத்ரியை சந்தித்து, மொயின் குரேஷி வழக்கு பற்றி, தான் விவாதித்ததாகவும் சதீஷ் தெரிவித்தார். பின்னர், ராகேஷ் அஸ்தானாவை தனது வீட்டுக்கு வரவழைத்து, கே.வி.சவுத்ரி விசாரணை நடத்தி உள்ளார். அப்போது, மொயின் குரேஷி உள்ளிட்டோருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என்று ராகேஷ் அஸ்தானா தெரிவித்துள்ளார்.

இதே விவகாரத்தில்தான், ராகேஷ் அஸ்தானாவுக்கும் லஞ்சம் கொடுத்ததாக சதீஷ் கூறினார். அதன்பேரில், ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுபற்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் கடந்த மாதம் 17-ந் தேதி, சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா தெரிவித்தார்.

அதே நாள் இரவு, இந்த விஷயத்தை ராகேஷ் அஸ்தானாவிடம் அஜித் தோவல் தெரிவித்தார். அப்போது, தன்னை கைது செய்யக்கூடாது என்று அஸ்தானா வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், இடைத்தரகர் மனோஜ் பிரசாத்தை கைது செய்தபோது, இவ்விவகாரத்தில் அஜித் தோவல், ரா அமைப்பின் சிறப்பு இயக்குனர் சமந்த் குமார் கோயல் ஆகியோரின் தொடர்பு தெரிய வந்தது. மனோஜ் பிரசாத்தும், அவருடைய தந்தையும் அஜித் தோவலுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று தெரிய வந்தது.

இந்த லஞ்ச வழக்கில் இத்தகைய பெரும்புள்ளிகளின் தொடர்புக்கான ஆதாரங்கள் தெரிய வந்ததால்தான், என்னை விசாரணைக்குழுவில் இருந்து விடுவிப்பதற்காக, நாக்பூருக்கு மாற்றி விட்டனர். இது தன்னிச்சையான, தீய நோக்கமுள்ள நடவடிக்கை.

இவ்வாறு எம்.கே.சின்கா தனது மனுவில் கூறியுள்ளார்.

தனது இடமாற்றத்துக்கு எதிரான மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

எம்.கே.சின்காவின் குற்றச்சாட்டு பற்றி கேட்டதற்கு, ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுத்ரி பதில் அளிக்க மறுத்து விட்டார்.



Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com