

புதுடெல்லி,
குடியரசு தினத்தையொட்டி, சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதியால் வழங்கப்படும் போலீஸ் பதக்கத்துக்கு சென்னையில் பணியாற்றும் சி.பி.ஐ. பெண் அதிகாரி பி.சி.தேன்மொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.
ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, அந்த நோட்டுகள் சட்டவிரோதமாக மாற்றித்தரப்பட்டது தொடர்பான பல்வேறு வழக்குகளை இவர் திறம்பட கையாண்டார். அதனால், மெச்சத்தக்க சேவைக்காக போலீஸ் பதக்கம் பெறுகிறார்.
அதுபோல், மத்தியபிரதேச தொழில்முறை தேர்வு வாரியம் (வியாபம்) மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டது தொடர்பான ஊழலை விசாரித்த சி.பி.ஐ. டி.ஐ.ஜி. தருண் கவுபாவும் மெச்சத்தக்க சேவைக்கான போலீஸ் பதக்கம் பெறுகிறார்.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன ஊழலை விசாரித்து, அதன் தலைவர் ராமலிங்க ராஜூ உள்ளிட்டோருக்கு தண்டனை பெற்றுத்தந்த சி.பி.ஐ. இணை இயக்குனர் (ஐதராபாத்) ஏ.ஒய்.வி.கிருஷ்ணா, சிறப்பான சேவைக்கான ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம் பெறுகிறார். இவர்களைத் தவிர, மேலும் 25 சி.பி.ஐ. அதிகாரிகளும் ஜனாதிபதி பதக்கம் பெறுகிறார்கள்.