சி.பி.ஐ. விசாரணையில் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என அச்சம்... அவசர கூட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு

சி.பி.ஐ. விசாரணையில் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய விசயங்களை ஆலோசிக்க அவசர கூட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்து உள்ளது.
சி.பி.ஐ. விசாரணையில் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என அச்சம்... அவசர கூட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு
Published on

புதுடெல்லி,

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றச்சாட்டு கூறப்பட்ட, டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவிடம், கடந்த பிப்ரவரி 26-ந்தேதி சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து, 8 மணி நேரம் நேரடி விசாரணை நடந்தது. அதன் முடிவில் அன்றிரவில், சிசோடியாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரை சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்தது. இதன் பின்னர் அந்த அனுமதி தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டது. இதனால், அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், சிசோடியாவிடம் டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி பற்றி அமலாக்க துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 9-ந்தேதி விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக அமலாக்க துறையும் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.

சிசோடியா மற்றும் மற்றவர்கள் மீது புதிய எப்.ஐ.ஆர். ஒன்றை கடந்த மார்ச் 20-ந்தேதி சி.பி.ஐ. பதிவு செய்தது. 2015-ம் ஆண்டு டெல்லி அரசு பீட்பேக் யூனிட் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கி தகவலை சேகரித்தது. இந்த தகவல், டெல்லியில் அமல்படுத்த கூடிய சாத்தியப்பட்ட விசயங்களை கொண்டு இருப்பதுடன், அவை அரசுக்கு உதவ கூடும் என்பதற்காக உருவானது.

ஆனால், தகவல் சேகரிப்பதற்கான இந்த அமைப்பால் அரசு கஜானாவுக்கு ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது என சி.பி.ஐ. குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது. இதுபோன்று மத்திய முகமைகளால் பல்வேறு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிசோடியா விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளார். கெஜ்ரிவால் அரசில் மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் டுவிட்டரில், மணீஷ் சிசோடியா மீது பல பொய்யான வழக்குகளை போட்டு, அவரை நீண்டகாலம் சிறையிலேயே இருக்கும்படி செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார். நாட்டுக்கு ஏற்பட்டு உள்ள சோகம் என வேதனை வெளியிட்டார்.

இந்த சூழலில், விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. அமைப்பு சில நாட்களுக்கு முன் சம்மன் அனுப்பியது. இதுபற்றி டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, எங்களுக்கு எதிராக கோர்ட்டில், மதுபான கொள்கை விசாரணையில், மத்திய அமைப்புகள் பொய் கூறுகின்றன. கைது செய்யப்பட்ட நபர்களை அவர்கள் சித்ரவதை செய்கின்றனர். எங்களை குற்றவாளியாக்க, அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது என கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

இதுபற்றி கெஜ்ரிவால் கூறும்போது, வழக்கில் சிசோடியா மீது, சி.பி.ஐ. அமைப்பு பொய்யாக குற்றம் சாட்டி வருகிறது என தெரிவித்து உள்ளார். பொய்யான வாக்குமூலங்களை பெற அடித்து, துன்புறுத்தப்படுகின்றனர். சான்றுகளை பெற அவர்களுக்கு எதிராக சித்ரவதையில் ஈடுபடுகின்றனர். ஊழலை ஒழிப்பதற்கு இது ஒரு பெரிய கொள்கையாக உள்ளது என கூறினார்.

சிசோடியா 14 மொபைல் போன்களை அழித்து விட்டார் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது. ஆனால் அமலாக்க துறை தற்போது, அவற்றில் 4 போன்கள் தங்களிடம் உள்ளன என கூறுகிறது. சி.பி.ஐ. அமைப்பு தன்னிடம் ஒரு போன் உள்ளது என கூறுகிறது. அந்த போன்களை அவர் அழித்து விட்டார் என்றால், பின்னர் அவர்கள் (அமலாக்க துறை மற்றும் சி.பி.ஐ. அமைப்பு) எப்படி அந்த போன்களை பெற முடியும்.

இந்த அமைப்புகள் கோர்ட்டில் பொய் கூறுகின்றன என்று குற்றச்சாட்டு கூறிய அவர், ஊழல் பற்றி டெல்லி சட்டசபையில் பேசிய நாளில் இருந்து, சி.பி.ஐ. தனக்கு சம்மன் அனுப்பும் என தெரியும் என்றும் கூறினார்.

இந்நிலையில், சம்மன் பற்றி கெஜ்ரிவால் இன்று காலை வெளியிட்ட வீடியோ ஒன்றில், அவர்கள் (சி.பி.ஐ.) என்னை இன்று அழைத்து உள்ளனர். நிச்சயம் நான் செல்வேன். அவர்கள் சக்தி படைத்தவர்கள். யாரை வேண்டுமென்றாலும் சிறைக்கு அனுப்புவார்கள்.

என்னை கைது செய்யும்படி சி.பி.ஐ.க்கு, பா.ஜ.க. உத்தரவிட்டால், பின்னர் அவர்களது உத்தரவுகளை தெளிவாக சி.பி.ஐ. மேற்கொள்வார்கள் என தெரிவித்து உள்ளார். நீங்கள் (பா.ஜ.க.) என்னை ஊழல்வாதி என கூறுகிறீர்கள். நான் வருமான வரி துறையில் ஆணையாளராக பணியாற்றி இருக்கிறேன். நான் விரும்பி இருந்தால் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து இருப்பேன்.

கெஜ்ரிவால் ஊழல் செய்பவர் என்றால், உலகில் நேர்மையானவர் என்று யாரும் இருக்க முடியாது என்று தெரிவித்து உள்ளார். இதன்பின் டெல்லியில் சி.பி.ஐ. தலைமையகத்திற்கு நேரில் ஆஜராக அவர் புறப்பட்டார். அதற்கு முன் டெல்லி மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலை நேரில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கெஜ்ரிவாலுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தும் டெல்லியில் காஷ்மீரி கேட் பகுதியில், ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் சமரசப்படுத்த முயன்றனர். எனினும், தொடர்ந்து அவர்கள் கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். வர மறுத்த ஒரு சிலரை இழுத்து சென்றனர். சாலையில் போராட்டம் நடத்திய நபர்களை கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றினர்.

சி.பி.ஐ. அமைப்பின் விசாரணை மாலை வரை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி பகுதி ஒருங்கிணைப்பாளரான கோபால் ராய், அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளார். இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், தேசிய செயலாளர்கள் உள்ளிட்ட மற்ற தலைவர்களும் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடப்பட்டு உள்ளது.

டெல்லி சி.பி.ஐ. தலைமையகத்தில் விசாரணை தொடர்ந்து வருகிறது. இதில் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்த நிலையில், அவசர கூட்டம் நடத்த அழைப்பு விடப்பட்டது. இதற்கு சிறிது நேரத்திற்கு முன், அக்கட்சியின் முக்கிய தலைவர்களான ராகவ் சதா, சஞ்சய் சிங் மற்றும் பலரை டெல்லி போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

அப்போது அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபடியே இருந்தனர். கெஜ்ரிவால் மீது உள்ள அச்சம் பா.ஜ.க.வை பாதித்து உள்ளது. அதனாலேயே இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இது ஒரு கோழைத்தன செயல். சிறைக்கு நாங்கள் அஞ்சமாட்டோம் என ராகவ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com