சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி முஷ்டாக் அகமது கைது

சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி முஷ்டாக் அகமது கைது செய்யப்பட்டார். #ChennaiRSSofficeblast
சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி முஷ்டாக் அகமது கைது
Published on

புதுடெல்லி,

சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் கடந்த 1993-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந்தேதி, சக்தி வாய்ந்த ஆர்.டி.எக்ஸ். மூலம் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில், 11 பேர் பலியானார்கள். இந்த வழக்கு, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது.

அல்-உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, ஜிகாத் கமிட்டி நிறுவனர் பழனி பாபா, ஐ.எஸ்.ஐ. ஏஜெண்ட் இமாம் அலி உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம், வெடிபொருள் சட்டம், தடா சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் மீது சென்னை தடா கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின்போது, 224 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை நடந்தபோதே, பழனி பாபா, 1997-ம் ஆண்டு வெட்டிக் கொல்லப்பட்டார். இமாம் அலி, போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்.

இதையடுத்து, 2007-ம் ஆண்டு இவ்வழக்கில் தடா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. 11 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்தது. அவர்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எஸ்.ஏ.பாட்ஷா உள்பட 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான முஷ்டாக் அகமது (வயது 56) கைது செய்யப்படவில்லை. 24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.

அவர்தான், குண்டு தயாரிக்க வெடிபொருட்களை வாங்கி வந்தவர் என்றும், இதர குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்தவர் என்றும் சி.பி.ஐ. கூறியது. எனவே, அவரை தொடர்ந்து தேடியது. இந்நிலையில், முஷ்டாக் அகமதுவை கைது செய்யும்வகையில் அவரது இருப்பிடம் பற்றி நம்பகமான துப்பு கொடுப்பவருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சி.பி.ஐ. கடந்த ஆண்டு அறிவித்தது.

இப்போது முக்கிய குற்றவாளி முஷ்டாக் அகமதுவை கைது செய்து உள்ளதாக சிபிஐ கூறிஉள்ளது. சென்னை புறநகர் பகுதியில் இன்று முஷ்டாக் அகமது கைது செய்யப்பட்டார் என சிபிஐ செய்தித் தொடர்பாளர் அபிசேக் தயாள் கூறிஉள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com