

புதுடெல்லி,
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில், சி.பி.ஐ. முன்னாள் இடைக்கால இயக்குனர், சி.பி.ஐ. சட்ட ஆலோசகர் ஆகியோருக்கு தலா ரு.1 லட்சம் அபராதம் விதித்ததுடன், கோர்ட்டு நேரம் முடியும் வரை கோர்ட்டு அறையின் மூலையில் அமருமாறு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தண்டனை விதித்தார்.
பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஒரு தொண்டு நிறுவன விடுதியில் தங்கியிருந்த பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கை, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சி.பி.ஐ. இணை இயக்குனர் ஏ.கே.சர்மா தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில் சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக பொறுப்பேற்ற எம்.நாகேஸ்வர ராவ், ஏ.கே.சர்மாவை மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டில், பீகார் சம்பவம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 7-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது விசாரணை அதிகாரி ஏ.கே.சர்மா மாற்றம் செய்யப்பட்டதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இது கோர்ட்டு உத்தரவை மீறும் செயல் என்று கூறியதோடு, எம்.நாகேஸ்வர ராவ் வருகிற 12-ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, சி.பி.ஐ. அதிகாரி எம்.நாகேஸ்வர ராவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், நாகேஸ்வர ராவின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவர் மீது கருணை காட்டுமாறு கேட்டுக்கொண்டார்.
அதற்கு தலைமை நீதிபதி, நாகேஸ்வர ராவின் மன்னிப்பை பரிசீலனை செய்கிறோம். இருப்பினும், அவரது விளக்கத்தை ஏற்க முடியாது என்று கூறினார். கோர்ட்டு அவமதிப்பு குற்றத்துக்காக நாகேஸ்வர ராவ், சி.பி.ஐ. சட்ட ஆலோசகர் பாசுரம் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
30 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கத்தக்க குற்றம் என்றபோதிலும், குறைந்தபட்ச தண்டனையாக, இன்று (நேற்று) கோர்ட்டு நேரம் முடியும் வரை நாகேஸ்வரராவ், பாசுரம் ஆகிய இருவரும் நீதிமன்ற விசாரணை அறையின் மூலையில் அமர்ந்திருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, இருவரும் அமர்ந்தனர்.
பிற்பகல் 3.40 மணியளவில், அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், இருவரையும் வெளியேற அனுமதிக்குமாறு நீதிபதிகளை கேட்டுக்கொண்டார்.
அதைக்கேட்ட நீதிபதிகள், என்ன இது? நாளை வரைக்கும் மூலையில் அமர உத்தரவிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? நீங்கள் எங்கு இருக்க வேண்டுமோ, அங்கேயே இருங்கள் என்று கோபமாக கூறினர்.
இதைத்தொடர்ந்து, கோர்ட்டு நேரம் முடிந்த பிறகு, இரண்டு அதிகாரிகளும் கோர்ட்டை விட்டு வெளியேறினர்.