16 மாநிலங்களில் 80 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை

சுப்ரீம் கோர்ட்டின் போலி இணையதளத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றிய டிஜிட்டல் கைது மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது
16 மாநிலங்களில் 80 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை
Published on

புதுடெல்லி,

டிஜிட்டல் கைது என்ற மோசடி வலையில் சிக்கி பலர் தங்கள் பணத்தையும், நிம்மதியையும் இழந்துள்ளனர். டிஜிட்டல் கைது என்பது மோசடி கும்பல், சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் போல பேசி பொதுமக்களை வீட்டில் சிறைபிடித்து பணம் பறிப்பதாகும். இதுபோன்ற டிஜிட்டல் கைது மோசடிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.

80 இடங்களில் சோதனை

இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டின் போலி இணையதளத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றிய டிஜிட்டல் கைது மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணை செய்து வருகிறது.இந்த மோசடி தொடர்பான 200-க்கும் மேற்பட்ட வழக்குகளில், 16 மாநிலங்களில் உள்ள 80 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதை சி.பி.ஐ. தரப்பு இன்று தெரிவித்தது. சி.பி.ஐ.யின் சுமார் 60 குழுக்கள் இந்த சோதனையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின்போது, சென்னை மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த நரேஷ், சஞ்சீப் சாஹா ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் போலியான நிறுவனங்களை உருவாக்குவதிலும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்த வங்கிக் கணக்குகளைத் தொடங்கி நிர்வகிப்பதிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் சுமார் ரூ.2 கோடி பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ய இந்தக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது என்று சி.பி.ஐ. செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com