லஞ்ச வழக்கில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. சோதனை: தங்கம், வெள்ளி, ரூ.1 கோடி பணம் பறிமுதல்


லஞ்ச வழக்கில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. சோதனை:  தங்கம், வெள்ளி, ரூ.1 கோடி பணம் பறிமுதல்
x

சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3.5 கிலோ எடை கொண்ட தங்கம், 2 கிலோ எடை கொண்ட வெள்ளி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

புதுடெல்லி,

டெல்லியில் வருமான வரி துறையில், ஒரு வேலைக்காக மூத்த அரசு அதிகாரி ரூ.45 லட்சம் தர வேண்டும் என தனிநபரிடம் கேட்டுள்ளார். அப்படி தரவில்லையெனில், சட்ட நடவடிக்கை பாயும். அபராதங்கள் விதிக்கப்படும். ஒத்துழைக்கவில்லையெனில் துன்புறுத்தல் தொடரும் என அந்த நபருக்கு அதிகாரி தரப்பில் இருந்து மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மே 31-ந்தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த அதிகாரி சார்பில் அவருடைய வீட்டில் இருந்த கூட்டாளி முதல் தவணையாக ரூ.25 லட்சம் லஞ்சப்பணம் பெற்றிருக்கிறார்.

அவரை, மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து, டெல்லி வசந்த் குஞ்ச் பகுதியிலுள்ள வீட்டில் வைத்து அந்த அதிகாரியும் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரும் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. 2007-ம் ஆண்டை சேர்ந்த அந்த இந்திய வருவாய் துறை அதிகாரி, டெல்லியில் வரி செலுத்துவோர் சேவைக்கான இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக பதவி வகித்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள், அந்த அதிகாரியின் வீட்டில் சோதனை நடத்தினர். இதில், சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3.5 கிலோ எடை கொண்ட தங்கம், 2 கிலோ எடை கொண்ட வெள்ளி ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.3.5 கோடி என கூறப்படுகிறது. இதுதவிர ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

25 வங்கி கணக்குகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. டெல்லி, மும்பை மற்றும் பஞ்சாபில் உள்ள அசையா சொத்துகளுக்கான ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

1 More update

Next Story