

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இருவரும் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர். வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டது.
மோசடி தொடர்பான விசாரணை தொடங்கியதுமே விசாரணைக்கு ஆஜராக சம்மன் விடுக்கப்பட்டது. ஆனால் இருவர் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்க அமலாக்கப்பிரிவு சர்வதேச போலீசான இன்டர்போலை நாடியது. இதனையடுத்து நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் விடுத்துள்ளது. இதேபோன்று மெகுல் சோக்ஷிக்கு எதிராகவும் ரெட்கார்னர் நோட்டீஸ் விடுப்பதற்கான பணியை இந்தியா முடித்துவிட்டது, விரைவில் விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மெகுல் சோக்ஷி அமெரிக்காவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இத்தகவல்களை அடிப்படையாக கொண்டு அமெரிக்காவிடம், இந்தியா உதவியை நாடியது.
ஆனால் இன்டர்போல் அமைப்பின் அமெரிக்க பிரிவு மெகுல் சோக்ஷி அமெரிக்காவில் இல்லை என்று தகவல் தெரிவித்துள்ளது.
ஆன்டிகுவாவில் மெகுல் சோக்ஷி
இந்நிலையில் மெகுல் சோக்ஷி ஆன்டிகுவா நாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. ஜூலை மாதம் கார்பியன் தேசமான ஆன்டிகுவாவிற்கு சென்ற மெகுல் சோக்ஷி அங்கு உள்ளூர் பாஸ்போர்ட்டை பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியது. இதனையடுத்து அந்நாட்டு அதிகாரிகளை நாடியுள்ள சிபிஐ, மெகுல் சோக்ஷிக்கு எதிராக இன்டர்போல் வெளியிட்ட நோட்டீஸை குறிப்பிட்டு, அவர் எங்கிருக்கிறார், அவர்களுடைய நகர்வு என்னவாக இருக்கிறது என்பது தொடர்பான தகவலை அளியுங்கள் என கேட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆன்டிகுவா நாளிதழ் வெளியிட்ட செய்தியின்படி அவர் அந்நாட்டில் 2017-ம் ஆண்டு குடியுரிமை வாங்கியுள்ளார் என தெரிகிறது.