

ஆட்டோவை ஏற்றி நீதிபதி கொலை
ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த், சில மாதங்களுக்கு முன் ஒருநாள் காலையில் நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்கள் அவர் மீது ஆட்டோவை ஏற்றி கொலை செய்தனர். முதலில் வழக்கம்போல இந்த சம்பவத்தை விபத்து வழக்காக போலீஸ் பதிவு செய்தது. ஆனால் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில், டி.வி. சேனல்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த சம்பவத்துக்கு ஒட்டுமொத்த நீதித்துறையும் கண்டன குரல் எழுப்பியது. அதையடுத்து இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
மயக்க சோதனை அறிக்கை
இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது மயக்க சோதனை அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. அதை ஜார்கண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரவிரஞ்சன், நீதிபதி எஸ்.என்.பிரசாத் அமர்வு நேற்று முன்தினம் பரிசீலித்தது.
ஆட்டோ டிரைவரும், அவரது கூட்டாளியும் ஆனந்த் ஒரு நீதிபதி என்று தெரிந்தும், அவரை தாக்குவதற்கு முன்பு அவரது செல்போனை பறித்ததாக சி.பி.ஐ. எப்படி ஒரு கதையை கொண்டு வந்துள்ளது என்று அவர்கள் கேட்டனர். இந்த கதையை நிராகரித்த நீதிபதிகள், இந்த கொலையின் அடிநாதம் என்ன என்று கண்டுபிடிப்பதற்கு இறங்க சி.பி.ஐ. தவறிவிட்டது என சாடினர்.
சி.பி.ஐ. நம்பகத்தன்மை கேள்விக்குறி
மேலும் நீதிபதிகள் கூறுகையில், இந்த வழக்கு விசாரணையில் சி.பி.ஐ.யின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகி இருக்கிறது. சி.பி.ஐ., இந்த வழக்கால் சோர்வு அடைந்து, விசாரணையில் இருந்து விலக விரும்புவதாக தெரிகிறது. அதனால்தான் குற்றம்சாட்டப்பட்டவர்கள், முறைப்படி குற்றம்சாட்டப்படாமல் இருக்க கதைகளை உருவாக்குகிறது. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சி.பி.ஐ. பாதுகாக்க முயற்சிப்பதுபோல தோன்றும் வகையில் விசாரணை நடந்து வருகிறது என குற்றம்சாட்டினர்.
கைது செய்யப்பட்டவர்களின் மயக்க சோதனை அறிக்கையை நீதிபதிகள் வாசித்தபோது, அதில் ஆட்டோ டிரைவரின் உதவியாளர் ராகுல், லகான் ஆட்டோவை வேகமாக ஓட்டினார். நான் இடதுபக்கம் உட்கார்ந்திருந்தேன். நீதிபதி மெதுவாக ஜாக்கிங் சென்றார். அவரது இடது கையில் கைக்குட்டை இருந்தது. லகான் நீதிபதி மீது வேண்டுமென்றே மோதியதால் அவரை தரையில் சரிந்தார் என கூறி இருந்தார். இது, நீதிபதியை கொல்வதற்கான பணி அவர்களுக்கு யாராலோ வழங்கப்பட்டிருக்கிறது என்பதை காட்டுவதாக அமைந்துள்ளது.
சி.பி.ஐ. விலக முயற்சியா?
இந்த வழக்கில் டெல்லியில் இருந்து சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, சி.பி.ஐ. தவிர தேசிய புலனாய்வு முகமையும் (என்.ஐ.ஏ.) மிகவும் திறமையான அமைப்பு என்றும், வழக்கை அதனிடம் ஒப்படைக்கலாம் என்றும் கூறினார்.
அப்போது நீதிபதிகள், அப்படியென்றால் சி.பி.ஐ. இந்த வழக்கில் இருந்து விலக முயற்சிக்கிறதா? என கேள்வி எழுப்பினர். இவ்வாறாக விசாரணை நடந்தது.