டெல்லி அரசுக்கு அடுத்த சிக்கல்: பேருந்துகள் வாங்குவதில் முறைகேடு - சிபிஐ விசாரணைக்கு துணைநிலை கவர்னர் ஒப்புதல்!

துணைநிலை கவர்னர் இப்போது நான்காவது மந்திரி மீது புகார் அளித்துள்ளார் என்று டெல்லி அரசு குற்றம் சாட்டியது.
டெல்லி அரசுக்கு அடுத்த சிக்கல்: பேருந்துகள் வாங்குவதில் முறைகேடு - சிபிஐ விசாரணைக்கு துணைநிலை கவர்னர் ஒப்புதல்!
Published on

புதுடெல்லி,

டெல்லி அரசால் டெல்லி போக்குவரத்து கழகத்துக்கு வாங்கப்பட்ட 1000 தாழ்ந்த தரைதள பேருந்துகள் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.

புதிய பேருந்துகள் வாங்குவதற்கான ஜூலை 2019 கொள்முதல் ஏலத்தில் முறைகேடுகள் நடந்ததாகவும், தொடர்ந்து மார்ச் 2020இல் நடந்த ஏலத்தில் முறைகேடுகள் நடந்ததாகவும் புகார் எழுந்தது.

பேருந்துகள் வாங்கிய இந்த குழுவின் தலைவராக டெல்லி போக்குவரத்து துறை மந்திரியை நியமித்ததில் ஊழல் மற்றும் முறைகேடு நடந்ததாக இந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லி துணைநிலை கவர்னருக்கு புகார் வந்தது. ஜூலை மாதம் தலைமைச் செயலாளருக்கு இந்தப் புகாரை அனுப்பிய கவர்னர், ஆகஸ்ட் மாதம் தலைமைச் செயலாளரிடம் இருந்து அறிக்கையை பெற்றிருந்தார்.

பேருந்துகள் வாங்கியதில் முறைகேடு தொடர்பான வழக்கில், தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் பரிந்துரையை தொடர்ந்து, சிபிஐ விசாரணைக்கு டெல்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா இப்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சிக்கு புதிய சிக்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று டெல்லி அரசு குற்றம் சாட்டியது. இது தொடர்பாக டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பேருந்துகள் வாங்கப்படவில்லை, டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லிக்கு அதிக படித்த கவர்னர் தேவை. இந்த மனிதருக்கு அவர் என்ன கையெழுத்துப் போடுகிறார் என்று தெரியவில்லை. அவர் மீது பல கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. கவனத்தை திசை திருப்பவே இதுபோன்ற விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

மூன்று மந்திரிகள் (முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி மற்றும் சதேந்தர் ஜெயின்) மீது அற்பமான புகார்களை அளித்த அவர், இப்போது நான்காவது மந்திரி மீது புகார் அளித்துள்ளார் என்று டெல்லி அரசு குற்றம் சாட்டியது.

காதி கிராமத் தொழில் ஆணையத்தின் தலைவராக இருந்து ரூ.1,400 கோடி ஊழல் செய்ததாக தற்போதைய டெல்லி கவர்னர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அவர் டெண்டர் இல்லாமல் தனது மகளுக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளார் என்று ஆம் ஆத்மி கட்சி கவர்னர் சாக்சேனா மீது புகார் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com