தீயணைப்பு துறையை ஏற்க மறுப்பு : சி.பி.ஐ.யின் இயக்குனராக இருந்த அலோக் வர்மா ராஜினாமா

தீயணைப்பு துறையை ஏற்க மறுத்து சி.பி.ஐ.யின் இயக்குனராக இருந்த அலோக் வர்மா ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார்.
தீயணைப்பு துறையை ஏற்க மறுப்பு : சி.பி.ஐ.யின் இயக்குனராக இருந்த அலோக் வர்மா ராஜினாமா
Published on

சி.பி.ஐ.யின் இயக்குனராக இருந்த அலோக் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முடிவு எடுப்பதற்காக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தில் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை அதிரடியாக நீக்கி முடிவு எடுக்கப்பட்டது. ஊழல் மற்றும் பணியில் அலட்சியம் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

3 பேர் கொண்ட இந்த தேர்வுக்குழுவில் மல்லிகார்ஜுன கார்கே மட்டும், அலோக் வர்மாவின் நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மீதமுள்ள 2 உறுப்பினர்களின் (பிரதமர் மோடி, தலைமை நீதிபதியின் பிரதிநிதி ஏ.கே.சிக்ரி) முடிவின்படி அலோக் வர்மாவின் நீக்கம் உறுதி செய்யப்பட்டது. அலோக் வர்மா நீக்கத்தை தொடர்ந்து, சி.பி.ஐ. இயக்குனர் பொறுப்பு தற்காலிகமாக நாகேஸ்வரராவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரை அவர் இயக்குனர் பொறுப்பை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் பதவி நீக்கம் செய்யப்பட்ட அலோக் வர்மா பொது தீ தடுப்பு பணிகள், சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல்படை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மீண்டும் பொறுப்பேற்ற மறு நாளிலேயே சி.பி.ஐ. இயக்குனர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலோக் வர்மா வருகிற 31ந்தேதி பணி ஓய்வு பெற இருந்த நிலையில், அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பொது தீ தடுப்பு பணிகள், சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல்படை இயக்குனராக நியமிக்கப்பட்டதை ஏற்க மறுத்து தன்னுடைய ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com