சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

55,368 மாணவர்கள் 95 சதவீதத்திற்கு கூடுதலான மதிப்பெண்களையும், 2,21,574 மாணவர்கள் 90 சதவீதத்திற்கு கூடுதலான மதிப்பெண்களையும் எடுத்துள்ளனர்.
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
Published on

புதுடெல்லி

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில், நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற 10-ம் வகுப்பு தேர்வை 25 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினார்கள்.

கடந்த ஆண்டு சி.பி.எஸ்.இ. 10 தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3-வது வாரத்திலேயே வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு காரணம், இந்தாண்டு முதல் புதிய கல்வி கொள்கையின்படி, 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள், தங்களின் மதிப்பெண்களை உயர்த்தி கொள்ளும் வகையில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இரண்டாம் தேர்வு எழுதும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த இரண்டாம் தேர்வுகள் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளன. இதனை மூத்த வாரிய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.7 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இந்த ஆண்டிலும், மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர். அவர்களின் தேர்ச்சி விகிதம் 94.99 சதவீதம் ஆகும். இது மாணவர்களின் தேர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும்போது 1.3 சதவீதம் கூடுதல் ஆகும்.

மொத்தம் 55,368 மாணவர்கள் 95 சதவீதத்திற்கு கூடுதலான மதிப்பெண்களை எடுத்துள்ளனர். 2,21,574 மாணவர்கள் 90 சதவீதத்திற்கு கூடுதலான மதிப்பெண்களை எடுத்துள்ளனர். இந்த முறை 8,074 மையங்களில் 24.71 லட்சத்திற்கும் கூடுதலானோர் தேர்வெழுதியுள்ளனர்.

நடப்பு ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கான தேர்வுகள் இரு பிரிவுகளாக நடத்தப்படுகின்றன. இதில், முதல் பிரிவை மாணவர்கள் எழுத வேண்டியது கட்டாயம். அதற்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளன.

தேர்வு முடிவுகளை, cbse.gov.in, results.digilocker.gov.in, umang.gov.in, cbseresults.nic.in, results.cbse.nic.in ஆகிய இணையதளங்களின் வாயிலாக, தங்களின் பதிவு எண், பள்ளி எண், அனுமதி அட்டை அடையாள எண், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com